பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோவான் 19:5-21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

5. இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான்.

6. பிரதான ஆசாரியரும் சேவகரும் அவரைக் கண்டபோது: சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்றான்.

7. யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னை தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே இவன் சாகவேண்டும் என்றார்கள்.

8. பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாய்ப் பயந்து,

9. மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.

10. அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.

11. இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.

12. அதுமுதல் பிலாத்து அவரை விடுதலைபண்ண வகைதேடினான். யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.

13. பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான்.

14. அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்த நாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.

15. அவர்கள்: இவனை அகற்றும், அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள்.

16. அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள்.

17. அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்.

18. அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.

19. பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது.

20. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது.

21. அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோவான் 19