பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 16:17-25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

17. வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும்.

18. தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான்.

19. ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான்.

20. லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து,

21. அவனுடைய மேஜையிலிருந்து விழுந்த துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று.

22. பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்.

23. பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான்.

24. அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணிரீல் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜீவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான்.

25. அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங்காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அனுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 16