பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரூத் 2:10-18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

10. அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது என்றாள்.

11. அதற்குப் போவாஸ் பிரதியுத்தரமாக: உன் புருஷன் மரணமடைந்தபின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும், உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது.

12. உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.

13. அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்றாள்.

14. பின்னும் போவாஸ் சாப்பாட்டு வேளையில் அவளைப் பார்த்து: நீ இங்கே வந்து, இந்த அப்பத்திலே புசித்து, காடியிலே உன் துணிக்கையைத் தோய்த்துக்கொள் என்றான். அப்படியே அவள் அறுப்பறுக்கிறவர்கள் அருகே உட்கார்ந்தாள்; அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான்; அவள் சாப்பிட்டு, திருப்தியடைந்து, மீந்ததை வைத்துக்கொண்டாள்.

15. அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது, போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம்பண்ணவேண்டாம்.

16. அவள் பொறுக்கிக்கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான்.

17. அப்படியே அவள் சாயங்காலமட்டும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டி அடித்துத் தீர்ந்தபோது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை கண்டது.

18. அவள் அதை எடுத்துக்கொண்டு, ஊருக்குள் வந்தாள்; அவள் பொறுக்கினதை அவளுடைய மாமி பார்த்தாள்; தான் திருப்தியாய்ச் சாப்பிட்டு மீதியாக வைத்ததையும் எடுத்து அவளுக்குக் கொடுத்தாள்.

முழு அத்தியாயம் படிக்க ரூத் 2