பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எஸ்றா 10:3-11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

3. இப்பொழுதும் அந்த ஸ்திரீகள் எல்லாரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனோடே உடன்படிக்கைப் பண்ணக்கடவோம்; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக.

4. எழுந்திரும்; இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்கு அடுத்தது; நாங்களும் உம்மோடேகூட இருப்போம்; நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றான்.

5. அப்பொழுது எஸ்றா எழுந்திருந்து, ஆசாரியரிலும் லேவியரிலும் பிரதானமானவர்களும் இஸ்ரவேல் அனைவரும் இந்த வார்த்தையின்படி செய்யும்படிக்கு, அவர்களை ஆணையிடச்சொன்னான்; அவர்கள் ஆணையிட்டார்கள்.

6. அதின்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்துக்கு முன்னிருந்து எழுந்து, எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் அறைக்குள் பிரவேசித்தான்; அங்கே வந்தபோது, அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் துக்கித்துக்கொண்டிருந்தான்.

7. அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாரும் எருசலேமிலே வந்து கூடவேண்டும் என்றும்,

8. மூன்று நாளைக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராதேபோனால், அவனுடைய பொருளெல்லாம் ஜப்தி செய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபைக்கு அவன் புறம்பாக்கப்படுவான் என்றும், யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம்பண்ணினார்கள்.

9. அப்படியே யூதா பென்யமீன் கோத்திரத்தார் எல்லாரும் மூன்று நாளைக்குள்ளே எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாந்தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக்காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.

10. அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி: நீங்கள் இஸ்ரவேலின்மேலிருக்கிற குற்றத்தை அதிகரிக்கப்பண்ண, மறு ஜாதியான ஸ்திரீகளை விவாகம்பண்ணினதினால் பாவஞ்செய்தீர்கள்.

11. இப்பொழுதும் நீங்கள் உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் ஜனங்களையும், மறுஜாதியான ஸ்திரீகளையும் விட்டு விலகுங்கள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க எஸ்றா 10