பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 26:12-23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

12. பராக்கிரமசாலிகளான வம்சத்தலைவரின் தொகையெல்லாம் இரண்டாயிரத்து அறுநூறு.

13. இவர்கள் கையின்கீழ்ச் சத்துருக்களுக்கு விரோதமாக ராஜாவுக்குத் துணை நிற்க, பராக்கிரமத்தோடே யுத்தம்பண்ணுகிற மூன்றுலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறுபேரான சேனை இருந்தது.

14. இந்தச் சேனையிலுள்ளவருக்கெல்லாம் உசியா கேடகங்களையும், ஈட்டிகளையும், தலைச்சீராக்களையும், மார்க்கவசங்களையும், வில்லுகளையும், கல்லெறிகிற கவண்களையும் ஆயத்தப்படுத்தினான்.

15. கோபுரங்கள்மேலும் அலங்கக்கோடிகள்மேலும் நின்று அம்புகளையும் பெரிய கற்களையும் பிரயோகிக்கிறதற்கு நிபுணரான தொழிலாளிகள் கற்பித்த யந்திரங்களையும் அவன் எருசலேமில் உண்டாக்கினான்; அப்படியே அவன் கீர்த்தி வெகுதூரம் பரம்பிற்று; அவன் பலப்படுமட்டும் ஆச்சரியமாய் அவனுக்கு அநுகூலமுண்டாயிற்று.

16. அவன் பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான்.

17. ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடேகூடக் கர்த்தரின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பிறகே உட்பிரவேசித்து,

18. ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்து நின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும்; பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள்.

19. அப்பொழுது உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடே கோபமாய்ப் பேசுகிறபோது, ஆசாரிருக்கு முன்பாகக் கர்த்தருடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று.

20. பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே குஷ்டரோகம் பிடித்தவனென்று கண்டு, அவனைத் தீவிரமாய் அங்கேயிருந்து வெளிப்படப்பண்ணினார்கள்; கர்த்தர் தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியே போகத் தீவிரப்பட்டான்.

21. ராஜாவாகிய உசியா தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, கர்த்தருடைய ஆலயத்துக்குப் புறம்பாக்கப்பட்டபடியினால், ஒரு தனித்த வீட்டிலே குஷ்டரோகியாய் வாசம்பண்ணினான்; அவன் குமாரனாகிய யோதாம் ராஜாவின் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்தான்.

22. உசியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்களை ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி எழுதினான்.

23. உசியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்த பின்பு, ஜனங்கள் அவனைக் குஷ்டரோகியென்று சொல்லி, அவனை அவன் பிதாக்களண்டையில், ராஜாக்களை அடக்கம்பண்ணுகிற இடத்திற்கு அருகான நிலத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 26