பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

லூக்கா 23:22-37 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

22. அவன் மூன்றாந்தரம் அவர்களை நோக்கி: ஏன், இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.

23. அப்படியிருந்தும் அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியரும் இட்ட சத்தம் மேற்கொண்டது.

24. அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து,

25. கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான்.

26. அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.

27. திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள்.

28. இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.

29. இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும்.

30. அப்பொழுது மலைகளை நோக்கி: எங்களின்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.

31. பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார்.

32. குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டு போகப்பட்டார்கள்.

33. கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.

34. அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.

35. ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.

36. போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:

37. நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க லூக்கா 23