பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 6:1-12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. நான் அலங்கத்தைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்குண்டாயிருந்த மற்றப் பகைஞரும் கேள்விப்பட்டபோது,

2. நான் வாசல்களுக்கு இன்னும் கதவு போடாதிருக்கையில், சன்பல்லாத்தும், கேஷேமும் ஆள் அனுப்பி: நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று கூப்பிட்டார்கள்; அவர்களோவென்றால் எனக்குப்பொல்லாப்புச் செய்ய நினைத்தார்கள்.

3. அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூடாது; நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கெட்டுப்போவானேன் என்று சொல்லச்சொன்னேன்.

4. அவர்கள் இந்தப்பிரகாரமாக நாலுதரம் எனக்குச் சொல்லியனுப்பினார்கள்; நானும் இந்தப்பிரகாரமாகவே அவர்களுக்கு மறுமொழி அனுப்பினேன்.

5. ஐந்தாந்தரமும் சன்பல்லாத்து அந்தப் பிரகாரமாகவே தன் வேலைக்காரனையும், அவன் கையிலே முத்திரைபோடாத ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பினான்.

6. அதிலே: நீரும் யூதரும் கலகம்பண்ண நினைக்கிறீர்கள் என்றும், அதற்காக நீர் அலங்கத்தைக் கட்டுகிறீர் என்றும், இவ்விதமாக நீர் அவர்களுக்கு ராஜாவாகப் போகிறீர் என்றும்,

7. யூதாவிலே ஒரு ராஜா இருக்கிறார் என்று உம்மைக்குறித்து எருசலேமிலே கூறுகிற தீர்க்கதரிசிகளையும் சம்பாதித்தீரென்றும் புறஜாதிகளுக்குள்ளே பிரஸ்தாபமாயிருக்கிறது, கஷ்மூவும் அப்படிச் சொல்லுகிறான்; இப்போதும் இந்தச் செய்தி ராஜாவுக்கு எட்டுமே; ஆகையால் நாம் ஒருவரோடொருவர் ஆலோசனை பண்ணுகிறதற்காக நீர் வரவேண்டும் என்று எழுதியிருந்தது.

8. அதற்கு நான்: நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை; அவைகள் உம்முடைய மனோராஜ்யமே ஒழிய வேறல்ல என்று சொல்லியனுப்பினேன்.

9. அந்த வேலை நடந்தேறாதபடிக்கு, எங்கள் கை சலித்துப்போகும் என்று சொல்லி, அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே, நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும்.

10. மெகதாபெயேலின் குமாரனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன் வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது, நான் அவனிடத்தில் போனேன்; அப்பொழுது அவன்: நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளே போய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான்.

11. அதற்கு நான்: என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை என்றேன்.

12. தேவன் அவனை அனுப்பவில்லையென்றும், தொபியாவும் சன்பல்லாத்தும் அவனுக்குக் கூலிகொடுத்ததினால், அவன் எனக்கு விரோதமாய் அந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொன்னான் என்றும் அறிந்துகொண்டேன்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 6