பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 47:1-9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. பின்பு அவர் என்னை ஆலயத்தின் வாசலுக்குத் திரும்பிவரப்பண்ணினார்; இதோ, வாசற்படியின் கீழிருந்து தண்ணீர் புறப்பட்டுக் கிழக்கே ஓடுகிறதாயிருந்தது; ஆலயத்தின் முகப்பு கிழக்கு நோக்கியிருந்தது; அந்தத் தண்ணீர் ஆலயத்தின் வலது புறமாய்ப் பலிபீடத்துக்குத் தெற்கே பாய்ந்தது.

2. அவர் என்னை வடக்கு வாசல் வழியாய்ப் புறப்படப்பண்ணி, என்னை வெளியிலே கீழ்த்திசைக்கு எதிரான புறவாசல்மட்டும் சுற்றி நடத்திக்கொண்டுபோனார்; அங்கே தண்ணீர் வலதுபுறத்திலிருந்து பாய்கிறதாயிருந்தது.

3. அந்தப் புருஷன் தமது கையில் நூலைப் பிடித்துக்கொண்டு, கிழக்கே புறப்படுகையில் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார்; தண்ணீர் கணுக்கால் அளவாயிருந்தது.

4. பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார்; அங்கே தண்ணீர் முழங்கால் அளவாயிருந்தது; பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து என்னைக் கடக்கப்பண்ணினார்; அங்கே தண்ணீர் இடுப்பளவாயிருந்தது.

5. பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்தார்; அங்கே அது நான் கடக்கக்கூடாத நதியாயிருந்தது; தண்ணீர் நீச்சாழமும் கடக்கமுடியாத நதியுமாயிருந்தது.

6. அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா என்று சொல்லி, என்னை நதியோரமாய்த் திரும்ப நடத்திக்கொண்டுபோனார்.

7. நான் நடந்துவருகையில், இதோ, நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் வெகு திரளான விருட்சங்கள் இருந்தது.

8. அவர் என்னை நோக்கி: இந்தத் தண்ணீர் கிழக்குதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், வனாந்தரவழியாய் ஓடி கடலில் விழும்; இது கடலில் பாய்ந்து, விழுந்தபின்பு, அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும்.

9. சம்பவிப்பது என்னவென்றால், இந்த நதி போகுமிடமெங்கும் சஞ்சரிக்கும் ஜீவபிராணிகள் யாவும் பிழைக்கும்; இந்தத் தண்ணீர் அங்கே வந்தபடியினால் வெகு ஏராளமான மச்சங்களும் உண்டாயிருக்கும்; இந்த நதி போகுமிடமெங்குமுள்ள யாவும் ஆரோக்கியப்பட்டுப் பிழைக்கும்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 47