பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 32:1-19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. பன்னிரண்டாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

2. மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக்குறித்துப் புலம்பி, அவனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஜாதிகளுக்குள்ளே நீ பாலசிங்கத்துக்கு ஒப்பானவன்; நீ பெருந்தண்ணீர்களில் முதலையைப்போல் இருந்து, உன் நதிகளில் எழும்பி, உன் கால்களால் தண்ணீர்களைக் கலக்கி, அவைகளின் ஆறுகளைக் குழப்பிவிட்டாய்.

3. ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் வெகு ஜனக்கூட்டத்தைக்கொண்டு உன்மேல் என் வலையை வீசுவேன்; அவர்கள் என் வலையில் உன்னை இழுத்துக்கொள்வார்கள்.

4. உன்னைத் தரையிலே போட்டுவிடுவேன்; நான் உன்னை வெட்டவெளியில் எறிந்துவிட்டு, ஆகாயத்துப் பறவைகளையெல்லாம் உன்மேல் இறங்கப்பண்ணி, பூமியனைத்தின் மிருகங்களையும் உன்னால் திருப்தியாக்கி,

5. உன் சதையைப் பர்வதங்களின்மேல் போட்டு, உன் உடலினாலே பள்ளத்தாக்குகளை நிரப்பி,

6. நீ நீந்தின தேசத்தின்மேல் உன் இரத்தத்தைப் பர்வதங்கள்மட்டும் பாயச்செய்வேன்; ஆறுகள் உன்னாலே நிரம்பும்.

7. உன்னை நான் அணைத்துப்போடுகையில், வானத்தை மூடி, அதின் நட்சத்திரங்களை இருண்டு போகப்பண்ணுவேன்; சூரியனை மேகத்தினால் மூடுவேன், சந்திரனும் தன் ஒளியைக் கொடாதிருக்கும்.

8. நான் வானஜோதியான விளக்குகளையெல்லாம் உன்மேல் இருண்டு போகப்பண்ணி, உன் தேசத்தின்மேல் அந்தகாரத்தை வரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

9. உன் சங்காரத்தை ஜாதிகள் மட்டும், நீ அறியாத தேசங்கள்மட்டும் நான் எட்டப்பண்ணுகையில், அநேகம் ஜனங்களின் இருதயத்தை விசனமடையப்பண்ணுவேன்.

10. அநேகம் ஜனங்களை உன்னிமித்தம் திகைக்கப்பண்ணுவேன்; அவர்களின் ராஜாக்கள், தங்கள் முகங்களுக்கு முன்பாக என் பட்டயத்தை நான் வீசுகையில் மிகவும் திடுக்கிடுவார்கள்; நீ விழும் நாளில் அவரவர் தம்தம் பிராணனுக்காக நிமிஷந்தோறும் தத்தளிப்பார்கள்.

11. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவின் பட்டயம் உன்மேல் வரும்.

12. பராக்கிரமசாலிகளின் பட்டயங்களால் உன் ஜனத்திரளை விழப்பண்ணுவேன்; அவர்களெல்லாரும் ஜாதிகளில் வல்லமையானவர்கள்; அவர்கள் எகிப்தின் ஆடம்பரத்தைக் கெடுப்பார்கள்; அதின் ஏராளமான கூட்டம் அழிக்கப்படும்.

13. திரளான தண்ணீர்களின் கரைகளில் நடமாடுகிற அதின் மிருகஜீவன்களையெல்லாம் அழிப்பேன்; இனி மனுஷனுடைய கால் அவைகளைக் கலக்குவதுமில்லை, மிருகங்களுடைய குளம்புகள் அவைகளைக் குழப்புவதுமில்லை.

14. அப்பொழுது அவர்களுடைய தண்ணீர்களைத் தெளியப்பண்ணி, அவர்கள் ஆறுகளை எண்ணெயைப்போல் ஓடப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

15. நான் எகிப்துதேசத்தைப் பாழாக்கும்போதும், தேசம் தன் நிறைவை இழந்து வெறுமையாய்க் கிடக்கும்போதும், நான் அதில் குடியிருக்கிற யாவரையும் சங்கரிக்கும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

16. இது புலம்பல்; இப்படிப் புலம்புவார்கள்; இப்படி ஜாதிகளின் குமாரத்திகள் புலம்புவார்கள்; இப்படி எகிப்துக்காகவும், அதினுடைய எல்லாத் திரளான ஜனங்களுக்காகவும் புலம்புவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

17. பின்னும் பன்னிரண்டாம் வருஷம் அந்த மாதத்தின் பதினைந்தாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

18. மனுபுத்திரனே, நீ எகிப்தினுடைய ஏராளமான ஜனத்தினிமித்தம் புலம்பி, அவர்களையும் பிரபலமான ஜாதிகளின் குமாரத்திகளையும் குழியில் இறங்கினவர்கள் அண்டையிலே பூமியின் தாழ்விடங்களில் தள்ளிவிடு.

19. மற்றவர்களைப்பார்க்கிலும் நீ அழகில் சிறந்தவளோ? நீ இறங்கி, விருத்தசேதனமில்லாதவர்களிடத்தில் கிட.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 32