பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 6:27-41 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

27. பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியாரும் உமது ஜனமாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது ஜனத்திற்குச் சுதந்தரமாகக் கொடுத்த உம்முடைய தேசத்தில் மழைபெய்யக் கட்டளையிடுவீராக.

28. தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்களுடைய சத்துருக்கள் அவர்கள் வாசஞ்செய்கிற தேசத்திலே அவர்களை முற்றிக்கை போடுகிறபோதும், யாதொரு வாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வந்திருக்கிறபோதும்,

29. எந்த மனுஷனானாலும், இஸ்ரவேலாகிய உம்முடைய ஜனத்தில் எவனானாலும், தன் தன் வாதையையும் வியாகுலத்தையும் உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும்,

30. உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து,

31. தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்கு தேவரீர் ஒருவரே மனுப்புத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே அவனவனுடைய எல்லா வழிகளுக்கும் தக்கதாய்ச் செய்து பலன் அளிப்பீராக.

32. உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜாதியல்லாத அந்நிய ஜாதியார் உம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தமும், உம்முடைய பலத்த கரத்தினிமித்தமும், ஓங்கிய உம்முடைய புயத்தினிமித்தமும், தூரதேசங்களிலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக நின்று விண்ணப்பம்பண்ணினால்,

33. உமது வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்களெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல, உம்முடைய நாமத்தை அறிந்து உமக்குப் பயப்பட்டு, நான் கட்டின இந்த ஆலயத்திற்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கு, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியே தேவரீர் செய்வீராக.

34. நீர் உம்முடைய ஜனங்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் சத்துருக்களோடு யுத்தம்பண்ணப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்துக்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக விண்ணப்பம்பண்ணினால்,

35. பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக.

36. பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே; ஆகையால் அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்கள் சத்துருக்கள் கையில் அவர்களை ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடிக்கிறவர்கள் அவர்களைத் தூரத்திலாகிலும் சமீபத்திலாகிலும் இருக்கிற தங்கள் தேசத்திற்குக் கொண்டுபோயிருக்கையில்,

37. அவர்கள் சிறைபட்டுப்போன தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனத்திரும்பி: நாங்கள் பாவஞ்செய்து அக்கிரமம்பண்ணி, துன்மார்க்கமாய் நடந்தோம் என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கிக் கெஞ்சி,

38. தாங்கள் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்ட தங்கள் சிறையிருப்பான தேசத்திலே, தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தங்கள் தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம்பண்ணினால்,

39. உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் ஜெபங்களையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து, உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்த உம்முடைய ஜனத்திற்கு மன்னித்தருளும்.

40. இப்போதும் என் தேவனே, இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக.

41. தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய தாபர ஸ்தலத்திற்கு தேவரீர் உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் எழுந்தருளும்; தேவனாகிய கர்த்தாவே, உமது ஆசாரியர் இரட்சிப்பைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் நன்மையிலே மகிழ்வார்களாக.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 6