பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 நாளாகமம் 25:13-26 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

13. தன்னோடுகூட யுத்தத்திற்கு வராதபடிக்கு, அமத்சியா திருப்பிவிட்ட யுத்த புருஷர், சமாரியா துவக்கிப் பெத்தொரோன்மட்டுமுள்ள யூதா பட்டணங்களின்மேல் விழுந்து, அவைகளில் மூவாயிரம்பேரை வெட்டி, திரளாய்க் கொள்ளையிட்டார்கள்.

14. அமத்சியா ஏதோமியரை முறிய அடித்து, சேயீர் புத்திரரின் தெய்வங்களைக் கொண்டுவந்தபின்பு. அவன் அவைகளைத் தனக்கு தெய்வங்களாக வைத்து, அவைகளுக்கு முன்பாகப் பணிந்து அவைகளுக்குத் தூபங்காட்டினான்.

15. அப்பொழுது, கர்த்தர் அமத்சியாவின்மேல் கோபமூண்டவராகி, அவனிடத்துக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார்; இவன் அவனை நோக்கி: தங்கள் ஜனத்தை உமது கைக்குத் தப்புவிக்காதேபோன ஜனத்தின் தெய்வங்களை நீர் நாடுவானேன் என்றான்.

16. தன்னோடே அவன் இப்படிப் பேசினபோது, ராஜா அவனை நோக்கி: உன்னை ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக வைத்தார்களோ? அதை விட்டுவிடு; நீ ஏன் வெட்டப்படவேண்டும் என்றான்; அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி அதை விட்டுவிட்டு: நீர் இப்படிச் செய்து, என் ஆலோசனையைக் கேளாமற்போனபடியினால், தேவன் உம்மை அழிக்க யோசனையாயிருக்கிறார் என்பதை அறிவேன் என்றான்.

17. பின்பு யூதாவின் ராஜாவாகிய அமத்சியா யோசனைபண்ணி, யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் புத்திரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம் வா என்று சொல்லியனுப்பினான்.

18. அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி: நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக விவாகஞ்செய்து கொடு என்று கேட்கச்சொல்லிற்று; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழி போகையில் ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது.

19. நீ ஏதோமியரை அடித்தாய் என்று பெருமைபாராட்ட உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது; இப்போதும் நீ உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடே யூதாவும்கூட விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச் சொன்னான்.

20. ஆனாலும் அமத்சியா செவிகொடாதேபோனான்; அவர்கள் ஏதோமின் தெய்வங்களை நாடினதினிமித்தம் அவர்களை அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படிக்கு தேவனாலே இப்படி நடந்தது.

21. அப்படியே இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலிருக்கிற பெத்ஷிமேசிலே அவனும், அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவும் தங்கள் சாமர்த்தியத்தைப் பார்த்தார்கள்.

22. யூதா இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.

23. இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அகசியாவின் குமாரனாகிய யோவாசுக்குப் பிறந்த அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவைப் பெத்ஷிமேசிலே பிடித்து, அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்து, எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல்தொடங்கி மூலைவாசல்மட்டும் நானூறு முழ நீளம் இடித்துப்போட்டு,

24. தேவனுடைய ஆலயத்தில் ஓபேத் ஏதோமின் வசத்திலே அகப்பட்ட சகல பொன்னையும், வெள்ளியையும், சகல பணிமுட்டுகளையும், ராஜாவின் அரமனைப் பொக்கிஷங்களையும், கிரியிருப்பவர்களையும், பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான்.

25. யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜா மரணமடைந்தபின்பு, யோவாசின் குமாரனாகிய அமத்சியா என்னும் யூதாவின் ராஜா பதினைந்து வருஷம் உயிரோடிருந்தான்.

26. அமத்சியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்கள் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க 2 நாளாகமம் 25