பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 22:3-16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

3. நீங்கள் இதுவரைக்கும் அநேக நாளாக உங்கள் சகோதரரைக் கைவிடாமல், உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளையைக் காத்துக்கொண்டு நடந்தீர்கள்.

4. இப்பொழுதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் உங்கள் சகோதரருக்குச் சொல்லியிருந்தபடியே, அவர்களை இளைப்பாறப்பண்ணினார்; ஆகையால் கர்த்தரின் தாசனாகிய மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே உங்களுக்குக் கொடுத்த உங்கள் காணியாட்சியான தேசத்திலிருக்கிற உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள்.

5. ஆனாலும் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்கள் முழு இருதயத்தோடும் உங்களை முழு ஆத்துமாவோடும் சேவிக்கிறதற்காக, கர்த்தரின் தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கற்பனையின்படியேயும் நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யும்படி மாத்திரம் வெகு சாவதானமாயிருங்கள் என்றான்.

6. இவ்விதமாய் யோசுவா அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.

7. மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்கு மோசே பாசானிலே சுதந்தரம் கொடுத்தான்; அதின் மற்றப் பாதிக்கு, யோசுவா யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே அவர்கள் சகோதரரோடேகூடச் சுதந்தரம் கொடுத்தான்; யோசுவா அவர்களை அவர்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிடுகிறபோது, அவர்களை ஆசீர்வதித்து,

8. நீங்கள் மிகுந்த ஐசுவரியத்தோடும், மகா ஏராளமான ஆடுமாடுகளோடும், பொன் வெள்ளி வெண்கலம் இரும்போடும், அநேக வஸ்திரங்களோடும் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பி, உங்கள் சத்துருக்களிடத்திலே கொள்ளையிட்டதை உங்கள் சகோதரரோடே பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்றான்.

9. அப்பொழுது ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், கர்த்தர் மோசேயைக் கொண்டு கட்டளையிட்டபடியே, தாங்கள் கைவசம் பண்ணிக்கொண்ட தங்கள் காணியாட்சி தேசமான கீலேயாத் தேசத்துக்குப் போகும்படிக்கு, கானான்தேசத்திலுள்ள சீலோவிலிருந்த இஸ்ரவேல் புத்திரரை விட்டுத் திரும்பிப்போனார்கள்.

10. கானான்தேசத்தில் இருக்கிற யோர்தானின் எல்லைகளுக்கு வந்தபோது, ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், அங்கே யோர்தானின் ஓரத்திலே பார்வைக்குப் பெரிதான ஒரு பீடத்தைக் கட்டினார்கள்.

11. ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் கானான் தேசத்துக்கு எதிரே இஸ்ரவேல் புத்திரருக்கு அடுத்த யோர்தானின் எல்லைகளில் ஒரு பீடத்தைக் கட்டினார்கள் என்று இஸ்ரவேல் புத்திரர் கேள்விப்பட்டார்கள்.

12. அவர்கள் அதைக் கேள்விப்பட்டபோது, இஸ்ரவேல் புத்திரரின் சபையாரெல்லாரும் அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணும்படி சீலோவிலே கூடி,

13. கீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபன் புத்திரரிடத்துக்கும் காத் புத்திரரிடத்துக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிடத்துக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருடைய குமாரனாகிய பினெகாசையும்,

14. அவனோடேகூட இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு பிதாவின் குடும்பத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகப் பத்துப் பிரபுக்களையும் அனுப்பினார்கள்; இஸ்ரவேலின் சேனைகளிலே ஆயிரவர்களுக்குள்ளே ஒவ்வொருவனும் தன் தன் பிதாவின் குடும்பத்துக்குத் தலைவனாயிருந்தான்.

15. அவர்கள் கீலேயாத் தேசத்திலே ரூபன் புத்திரர் காத் புத்திரர் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாராகிய இவர்களிடத்திற்கு வந்து:

16. நீங்கள் இந்நாளிலே கர்த்தரைப் பின்பற்றாதபடிக்குப் புரண்டு, இந்நாளிலே கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணும்படியாக உங்களுக்கு ஒரு பீடத்தைக் கட்டி, இஸ்ரவேலின் தேவனுக்கு விரோதமாகப் பண்ணின இந்தத் துரோகம் என்ன?

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 22