பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யோசுவா 21:1-12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. அப்பொழுது லேவியரின் வம்சப்பிதாக்களின் தலைவர்; கானான்தேசத்திலிருக்கிற சீலோவிலே ஆசாரியனாகிய எலெயாசாரிடத்திலும், நூனின் குமாரனாகிய யோசுவாவினிடத்திலும், இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களிலுள்ள தலைவரிடத்திலும் சேர்ந்துவந்து:

2. நாங்கள் குடியிருக்கும் பட்டணங்களையும், எங்கள் மிருகஜீவனுக்காக வெளிநிலங்களையும் எங்களுக்குக் கொடுக்கும்படி, கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டாரே என்றார்கள்.

3. கர்த்தருடைய வாக்கின்படியே, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சுதந்தரத்திலே லேவியருக்குப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்.

4. கோகாத்தியரின் வம்சங்களுக்குச் சீட்டு விழுந்தது; அந்தச் சீட்டின்படி லேவியரில் ஆசாரியனாகிய ஆரோனின் குமாரருக்கு யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், பென்யமீன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று.

5. கோகாத்தின் மற்றப் புத்திரருக்கு, எப்பிராயீம் கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், தாண் கோத்திரத்திலும், மனாசேயின் பாதிக் கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பத்து.

6. கெர்சோன் புத்திரருக்கு, இசக்கார் கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி கோத்திரத்திலும், பாசானிலிருக்கிற மனாசேயின் பாதிக் கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று.

7. மெராரி புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பன்னிரண்டு.

8. இந்தப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் இஸ்ரவேல் புத்திரர், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடியே, சீட்டுப்போட்டு லேவியருக்குக் கொடுத்தார்கள்.

9. லேவியின் குமாரரில் முதலாம் சீட்டைப்பெற்ற கோகாத்தியரின் வம்சங்களிலே இருக்கிற ஆரோனின் குமாரருக்கு,

10. யூதா புத்திரரின் கோத்திரத்திலும், சிமியோன் புத்திரரின் கோத்திரத்திலும், அவர்கள் கொடுத்தவைகளும் பேர்பேராகச் சொல்லப்பட்டவைகளுமான பட்டணங்களின் நாமங்களாவன:

11. யூதாவின் மலைத்தேசத்தில் ஆனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனையும் அதைச் சூழ்ந்த வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்.

12. பட்டணத்தைச் சேர்ந்த வயல்களையும் அதின் பட்டிகளையும் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக் காணியாட்சியாகக் கொடுத்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யோசுவா 21