பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 20:26-37 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

26. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனங்களும் புறப்பட்டு, தேவனுடைய வீட்டிற்குப் போய், அங்கே கர்த்தருடைய சந்நிதியில் அழுது, தரித்திருந்து, அன்று சாயங்காலமட்டும் உபவாசித்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டு,

27. கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; தேவனுடைய உடன்படிக்கையின் பெட்டி அந்நாட்களில் அங்கே இருந்தது.

28. ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரின் மகன் பினெகாஸ் அந்நாட்களில் அவருடைய சந்நிதியில் நின்றான்; எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே பின்னும் யுத்தம்பண்ணப் புறப்படலாமா புறப்படலாகாதா என்று அவர்கள் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்: போங்கள்; நாளைக்கு அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.

29. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கிபியாவைச்சுற்றிலும் பதிவிடையாட்களை வைத்து,

30. மூன்றாம் நாளிலே பென்யமீன் புத்திரருக்கு விரோதமாய்ப் போய், முன் இரண்டு தரம் செய்ததுபோல, கிபியாவுக்குச் சமீபமாய்ப் போருக்கு அணிவகுத்து நின்றார்கள்.

31. அப்பொழுது பென்யமீன் புத்திரர் ஜனத்திற்கு விரோதமாய்ப் புறப்பட்டுப் பட்டணத்தை விட்டு, அப்பாலே வந்து, வெளியிலே பெத்தேலுக்கும் கிபியாவுக்கும் போகிற இரண்டு வழிகளில் இஸ்ரவேல் ஜனத்தில் ஏறக்குறைய முப்பதுபேரை, முதல் இரண்டுதரம் செய்ததுபோல, வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்.

32. முன்போல நமக்கு முன்பாக முறிய அடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீன் புத்திரர் சொன்னார்கள்; இஸ்ரவேல் புத்திரரோ: அவர்களைப் பட்டணத்தை விட்டு அப்பாலேயிருக்கிற வழிகளிலே வரப்பண்ணும்படிக்கு, நாம் ஓடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.

33. அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் தங்கள் ஸ்தானத்திலிருந்து எழும்பி, பாகால்தாமாரிலே யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்; இஸ்ரவேலரில் கிபியாவின் பள்ளத்தாக்கிலே பதிவிருந்தவர்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு,

34. அவர்களில் எல்லா இஸ்ரவேலிலும் தெரிந்துகொள்ளப்பட்ட பதினாயிரம்பேர் கிபியாவுக்கு எதிரே வந்தார்கள்; யுத்தம் பலத்தது; ஆனாலும் தங்களுக்கு விக்கினம் நேரிட்டது என்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.

35. கர்த்தர் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பென்யமீனை முறிய அடித்தார்; அந்நாளிலே இஸ்ரவேல் புத்திரர் பென்யமீனிலே பட்டயம் உருவுகிற ஆட்களாகிய இருபத்தையாயிரத்து நூறுபேரைச் சங்கரித்தார்கள்.

36. இஸ்ரவேலர் கிபியாவுக்கு அப்பாலே வைத்த பதிவிடையை நம்பியிருந்தபடியினாலே, பென்யமீனருக்கு இடம் கொடுத்தார்கள்; அதினாலே அவர்கள் முறிய அடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீன் புத்திரருக்குக் காணப்பட்டது.

37. அப்பொழுது பதிவிடையிருந்தவர்கள் தீவிரமாய்க் கிபியாவின்மேல் பாய்ந்து பரவி, பட்டணத்தில் இருக்கிறவர்களெல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 20