பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 22:4-15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

4. இந்த வார்த்தையின்படியே நீங்கள் மெய்யாய்ச் செய்வீர்களாகில், தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாக்கள் இரதங்கள்மேலும் குதிரைகள்மேலும் ஏறி, அவனும் அவன் ஊழியக்காரரும் அவன் ஜனமுமாக இந்த அரமனை வாசல்களின் வழியாய் உட்பிரவேசிப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

5. நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளாமற்போனீர்களேயாகில் இந்த அரமனை பாழாய்ப்போகும் என்று என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

6. யூதா ராஜாவின் அரமனையைக் குறித்துக் கர்த்தர்: நீ எனக்குக் கீலேயாத்தைப்போலவும் லீபனோனின் கொடுமுடியைப்போலவும் இருக்கிறாய்; ஆனாலும் மெய்யாகவே நான் உன்னை வனாந்தரத்தைப்போலவும், குடியில்லாத பட்டணங்களைப்போலவும் ஆக்கிவிடுவேன்.

7. சங்காரக்காரரை அவரவர் ஆயுதங்களோடுங்கூட நான் உனக்கு விரோதமாக ஆயத்தப்படுத்துவேன்; உன் உச்சிதமான கேதுருக்களை அவர்கள் வெட்டி, அக்கினியிலே போடுவார்கள்.

8. அநேகம் ஜாதிகள் இந்த நகரத்தைக் கடந்துவந்து, அவனவன் தன்தன் அயலானை நோக்கி: இந்தப் பெரிய நகரத்துக்குக் கர்த்தர் இப்படிச் செய்தது என்னவென்று கேட்பார்கள்.

9. அதற்குப் பிரதியுத்தரமாக: அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரின் உடன்படிக்கையை விட்டுவிட்டு, அந்நிய தேவர்களைப் பணிந்துகொண்டு, அவைகளுக்கு ஆராதனை செய்தபடியினால் இப்படியாயிற்று என்பார்கள் என்று சொல்லுகிறார்.

10. மரித்தவனுக்காக அழவேண்டாம், அவனுக்காகப் பரிதபிக்கவும் வேண்டாம், சிறைப்பட்டுப்போனவனுக்காகவே அழுங்கள்; அவன் இனித் திரும்பிவருவதுமில்லை, தன் ஜனன பூமியைக் காண்பதுமில்லை.

11. தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்துக்கு வந்து, அரசாண்டு, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின் குமாரனாகிய சல்லூமைக் குறித்து: அவன் இனி இங்கே திரும்பவராமல்,

12. தான் கொண்டுபோகப்பட்ட ஸ்தலத்திலே மரிப்பான்; இந்த தேசத்தை அவன் இனிக் காண்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

13. தனக்கு விஸ்தாரமான வீட்டையும், காற்று வீசும் விசாலமான மேலறைகளையும் கட்டுவேனென்று சொல்லி, பலகணிகளைத் தனக்குத் திறந்து, கேதுரு பலகைகளை வைத்து, ஜாதிலிங்கவருணம் பூசி,

14. அநீதியினாலே தன் வீட்டையும், அநியாயத்தினாலே தன் மேலறைகளையும் கட்டி, தன் அயலான் செய்யும் வேலைக்குக் கூலிகொடாமல், அவனைச் சும்மா வேலைகொள்ளுகிறவனுக்கு ஐயோ!

15. நீ கேதுருமர மாளிகைகளில் உலாவுகிறபடியினாலே ராஜாவாயிருப்பாயோ? உன் தகப்பன் போஜனபானம்பண்ணி, நியாயமும் நீதியுஞ்செய்தபோது அவன் சுகமாய் வாழ்ந்திருக்கவில்லையோ?

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 22