பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 11:22-35 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

22. ஆடுமாடுகளை அவர்களுக்காக அடித்தாலும் அவர்களுக்குப் போதுமா? சமுத்திரத்து மச்சங்களையெல்லாம் அவர்களுக்காகச் சேர்த்தாலும் அவர்களுக்குப் போதுமா என்றான்.

23. அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று. நீ இப்பொழுது காண்பாய் என்றார்.

24. அப்பொழுது மோசே புறப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்குச் சொல்லி, ஜனங்களின் மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான்.

25. கர்த்தர் மேகத்தில் இறங்கி, அவனோடே பேசி, அவன் மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபது பேர்மேலும் வைத்தார்; அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினமாத்திரத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள்.

26. அப்பொழுது இரண்டு பேர் பாளயத்தில் இருந்துவிட்டார்கள்; ஒருவன் பேர் எல்தாத், மற்றவன் பேர் மேதாத்; அவர்களும் பேர்வழியில் எழுதப்பட்டிருந்தும், கூடாரத்துக்குப் போகப் புறப்படாதிருந்தார்கள்; அவர்கள்மேலும் ஆவி வந்து தங்கினதினால், பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.

27. ஒரு பிள்ளையாண்டான் ஓடிவந்து, எல்தாதும், மேதாதும் பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள் என்று மோசேக்கு அறிவித்தான்.

28. உடனே மோசேயினிடத்திலுள்ள வாலிபரில் ஒருவனும் அவனுடைய ஊழியக்காரனும் நூனின் குமாரனுமாகிய யோசுவா பிரதியுத்தரமாக: என் ஆண்டவனாகிய மோசேயே, அவர்களைத் தடைபண்ணும் என்றான்.

29. அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான்.

30. பின்பு, மோசேயும் இஸ்ரவேலின் மூப்பரும் பாளயத்திலே வந்து சேர்ந்தார்கள்.

31. அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒரு நாள் பிரயாணமட்டும், அந்தப்பக்கம் ஒரு நாள் பிராயணமட்டும், தரையின்மேல் இரண்டு முழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது,

32. அப்பொழுது ஜனங்கள் எழும்பி, அன்று பகல்முழுவதும், இராமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்; கொஞ்சமாய்ச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான்; அவைகளைப் பாளயத்தைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்து வைத்தார்கள்.

33. தங்கள் பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்னுமுன்னே கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்குள்ளே மூண்டது; கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார்.

34. இச்சித்த ஜனங்களை அங்கே அடக்கம்பண்ணினதினால், அந்த ஸ்தலத்துக்குக் கிப்ரோத் அத்தாவா என்று பேரிட்டான்.

35. பின்பு, ஜனங்கள் கிப்ரோத் அத்தாவா என்னும் இடத்தை விட்டு, ஆஸ்ரோத்துக்குப் பிரயாணம்பண்ணி, ஆஸ்ரோத்திலே தங்கினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 11