பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 37:16-28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

16. மனுபுத்திரனே, நீ ஒரு கோலை எடுத்து, அதிலே யூதாவுக்கும் அதைச் சேர்ந்த இஸ்ரவேல் புத்திரருக்கும் அடுத்தது என்று எழுதி; பின்பு வேறொரு கோலை எடுத்து, அதிலே எப்பிராயீமுக்கும் அதைச்சேர்ந்த இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் அடுத்த யோசேப்பின் கோலென்று எழுதி,

17. அவைகளை ஒரே கோலாகும்படி ஒன்றோடொன்று இசையச்செய், அவைகள் உன் கையில் ஒன்றாகும்.

18. இவைகளின் பொருள் இன்னதென்று எங்களுக்கு அறிவிக்கமாட்டீரோ என்று உன் ஜனத்தின் புத்திரர் உன்னிடத்தில் கேட்டால்,

19. நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, எப்பிராயீமுக்கும் அதைச் சேர்ந்த இஸ்ரவேல் கோத்திரங்களுக்கும் அடுத்த யோசேப்பின் கோலை எடுத்து, அதை யூதாவின் கோலோடே சேர்த்து, அவைகளை ஒரே கோலாக்குவேன்; அவைகள் என் கையில் ஒன்றாகும் என்கிறார் என்று சொல்.

20. சொல்லும்போது, நீ எழுதின கோல்கள் அவர்களுடைய கண்களுக்கு முன்பாக உன் கையில் இருக்கவேண்டும்.

21. நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் இதோ, நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் போயிருக்கும் ஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, சுற்றிலுமிருந்து அவர்களைச் சேர்த்து, அவர்களை அவர்கள் சுயதேசத்திலே வரப்பண்ணி,

22. அவர்களை இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே ஒரே ஜாதியாக்குவேன்; ஒரே ராஜா அவர்கள் எல்லாருக்கும் ராஜாவாக இருப்பார்; அவர்கள் இனி இரண்டு ஜாதிகளாக இருப்பதில்லை; அவர்கள் இனி இரண்டு ராஜ்யங்களாகப் பிரிவதுமில்லை.

23. அவர்கள் இனித் தங்கள் நரகலான விக்கிரகங்களினாலும் தங்கள் அருவருப்புகளினாலும் தங்களுடைய சகல மீறுதல்களினாலும் தங்களைத் தீட்டுப்படுத்துவதுமில்லை; அவர்கள் குடியிருந்து பாவஞ்செய்த எல்லா இடங்களிலிருந்தும் நான் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்து, அவர்களைச் சுத்தம் பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்.

24. என் தாசனாகிய தாவீது என்பவர் அவர்கள்மேல் ராஜாவாக இருப்பார்; அவர்கள் எல்லாருக்கும் ஒரே மேய்ப்பர் இருப்பார்; அப்பொழுது அவர்கள் என் நியாயங்களில் நடந்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படியே செய்து,

25. நான் என் தாசனாகிய யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்கள் பிதாக்கள் குடியிருந்ததுமான தேசத்திலே குடியிருப்பார்கள்; அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளும் அதிலே என்றென்றைக்கும் குடியிருப்பார்கள்; என் தாசனாகிய தாவீது என்பவர் என்றென்றைக்கும் அவர்களுக்கு அதிபதியாயிருப்பார்.

26. நான் அவர்களோடே சமாதானஉடன்படிக்கை செய்வேன்; அது அவர்களுக்கு நித்திய உடன்படிக்கையாயிருக்கும்; நான் அவர்களை நிலைப்படுத்தி, அவர்களை வர்த்திக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே என் பரிசுத்த ஸ்தலத்தை என்றென்றைக்கும் ஸ்தாபிப்பேன்.

27. என் வாசஸ்தலம் அவர்களிடத்தில் இருக்கும், நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.

28. அப்படியே என் பரிசுத்த ஸ்தலம் அவர்கள் நடுவிலே என்றென்றைக்கும் இருக்கும்போது, நான் இஸ்ரவேலைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று ஜாதிகள் அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 37