பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 4:36-49 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

36. உன்னை உபதேசிக்கும்படிக்கு, அவர் வானத்திலிருந்து தமது சத்தத்தை உனக்குக் கேட்கப்பண்ணி, பூமியிலே தமது பெரிய அக்கினியை உனக்குக் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வார்த்தைகளைக் கேட்டாய்.

37. அவர் உன் பிதாக்களில் அன்பு கூர்ந்தபடியால், அவர்களுடைய பின்சந்ததியைத் தெரிந்துகொண்டு,

38. உன்னிலும் பலத்த பெரிய ஜாதிகளை உனக்கு முன்னின்று துரத்தவும், உன்னை அழைத்துக்கொண்டுபோய், இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்கள் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கவும், உன்னைத் தமது முகத்துக்குமுன் தமது மிகுந்த வல்லமையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

39. ஆகையால், உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து,

40. நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படிக்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு என்றைக்கும் கொடுக்கிற தேசத்திலே நீ நீடித்த நாளாயிருக்கும்படிக்கும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய கட்டளைகளையும் அவருடைய கற்பனைகளையும் கைக்கொள்ளக்கடவாய் என்றான்.

41. முற்பகையின்றிக் கைப்பிசகாய் பிறனைக் கொன்றவன் அடைக்கலப்பட்டணங்களில் ஒரு பட்டணத்தில் தப்பியோடிப்போய்ப் பிழைத்திருக்கும்படியாக,

42. ரூபனியரைச் சேர்ந்த சமபூமியாகிய வனாந்தரத்திலுள்ள பேசேரும், காத்தியரைச் சேர்ந்த கீலேயாத்திலுள்ள ராமோத்தும், மனாசேயரைச் சேர்ந்த பாசானிலுள்ள கோலானுமாகிய,

43. மூன்று பட்டணங்களை மோசே யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையிலே ஏற்படுத்தினான்.

44. இதுவே மோசே இஸ்ரவேல் புத்திரருக்கு விதித்த பிரமாணம்.

45. இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, யோர்தானுக்கு இப்புறத்தில் எஸ்போனில் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுடைய தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே, அவர்களுக்கு மோசே சொன்ன சாட்சிகளும் கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.

46. மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு அந்த ராஜாவை முறிய அடித்து,

47. யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையில் அர்னோன் ஆற்றங்கரையிலுள்ள ஆரோவேர் தொடங்கி எர்மோன் என்னும் சீயோன் மலைவரைக்குமுள்ள தேசமும்,

48. யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையில் அஸ்தோத் பிஸ்காவுக்கும் தாழ்ந்த சமனான வெளியைச்சேர்ந்த கடல்மட்டுமுள்ள சமனான வெளியனைத்துமாகிய,

49. எமோரியருடைய இரண்டு ராஜாக்களின் தேசங்களான சீகோனுடைய தேசத்தையும், பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 4