பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 32:22-40 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

22. என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகமட்டும் எரியும்; அது பூமியையும், அதின் பலனையும் அழித்து, பர்வதங்களின் அஸ்திபாரங்களை வேகப்பண்ணும்.

23. தீங்குகளை அவர்கள்மேல் குவிப்பேன்; என்னுடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் பிரயோகிப்பேன்.

24. அவர்கள் பசியினால் வாடி, எரிபந்தமான உஷ்ணத்தினாலும், கொடிய வாதையினாலும் மாண்டுபோவார்கள்; துஷ்டமிருகங்களின் பற்களையும், தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும் அவர்களுக்குள் அனுப்புவேன்.

25. வெளியிலே பட்டயமும், உள்ளே பயங்கரமும், வாலிபனையும், கன்னியையும், குழந்தையையும், நரைத்த கிழவனையும் அழிக்கும்.

26. எங்கள் கை உயர்ந்ததென்றும், கர்த்தர் இதையெல்லாம் செய்யவில்லை என்றும் அவர்களுடைய பகைஞர் தப்பெண்ணங்கொண்டு சொல்லுவார்கள் என்று,

27. நான் சத்துருவின் குரோதத்திற்கு அஞ்சாதிருந்தேனானால், நான் அவர்களை மூலைக்குமூலை சிதற அடித்து, மனிதருக்குள் அவர்களுடைய பேர் அற்றுப்போகப்பண்ணுவேன் என்று சொல்லியிருப்பேன்.

28. அவர்கள் யோசனைகெட்ட ஜாதி, அவர்களுக்கு உணர்வு இல்லை.

29. அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக் கொண்டால் நலமாயிருக்கும் என்றார்.

30. அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி?

31. தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய சத்துருக்களே தீர்மானிக்கிறார்கள்.

32. அவர்களுடைய திராட்சச்செடி, சோதோமிலும் கொமோரா நிலங்களிலும் பயிரான திராட்சச்செடியிலும் தாழ்ந்த ஜாதியாயிருக்கிறது, அவைகளின் பழங்கள் பித்தும் அவைகளின் குலைகள் கசப்புமாய் இருக்கிறது.

33. அவர்களுடைய திராட்சரசம் வலுசர்ப்பங்களின் விஷமும் விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமானது.

34. இது என்னிடத்தில் வைத்துவைக்கப்பட்டு, என் பொக்கிஷங்களில் இது முத்திரை போடப்பட்டிருக்கிறதில்லையோ?

35. பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் சமீபமாயிருக்கிறது; அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும்.

36. கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்த்து, அவர்கள் பெலன் போயிற்றென்றும், அடைக்கப்பட்டவர்களாவது விடுதலை பெற்றவர்களாவது ஒருவரும் இல்லையென்றும் காணும்போது, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார்.

37. அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைத் தின்று, பானபலிகளின் திராட்சரசத்தைக் குடித்த அவர்களுடைய தெய்வங்களும் அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே?

38. அவைகள் எழுந்து உங்களுக்குச் சகாயம்பண்ணி உங்களுக்கு மறைவிடமாயிருக்கட்டும்.

39. நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை.

40. நான் என் கரத்தை வானத்திற்கு நேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் என்கிறேன்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 32