பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 30:1-18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளைகொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள்.

2. அப்பொழுது யாக்கோபு ராகேலின் மேல் கோபங்கொண்டு: தேவனல்லோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனா? என்றான்.

3. அப்பொழுது அவள்: இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; அவள் என் மடிக்குப் பிள்ளைகளைப் பெறவும், அவளாலாகிலும் என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும் என்று சொல்லி,

4. அவனுக்குத் தன் வேலைக்காரியாகிய பில்காளை மனைவியாகக் கொடுத்தாள்; அப்படியே யாக்கோபு அவளைச் சேர்ந்தான்.

5. பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

6. அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள்.

7. மறுபடியும் ராகேலின் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.

8. அப்பொழுது ராகேல்: நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன் என்று சொல்லி, அவனுக்கு நப்தலி என்று பேரிட்டாள்.

9. லேயாள் தான் பிள்ளைபெறுகிறது நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.

10. லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்.

11. அப்பொழுது லேயாள்: ஏராளமாகிறதென்று சொல்லி, அவனுக்குக் காத் என்று பேரிட்டாள்.

12. பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள்.

13. அப்பொழுது லேயாள்: நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பேரிட்டாள்.

14. கோதுமை அறுப்பு நாட்களிலே ரூபன் வயல்வெளியிலே போய், தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி: உன் குமாரனுடைய தூதாயீம் கனியில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள்.

15. அதற்கு அவள்: நீ என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்பகாரியமா? என் குமாரனுடைய தூதாயீம் கனிகளையும் எடுத்துக்கொள்ளவேண்டுமோ என்றாள்; அதற்கு ராகேல்: உன் குமாரனுடைய தூதாயீம் கனிகளுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடே சயனிக்கட்டும் என்றாள்.

16. சாயங்காலத்தில் யாக்கோபு வெளியிலிருந்து வருகையில் லேயாள் புறப்பட்டு அவனுக்கு எதிர்கொண்டுபோய்: என் குமாரனுடைய தூதாயீம் கனிகளால் உம்மைக் கொண்டேன்; ஆகையால், நீர் என்னிடத்தில் வரவேண்டும் என்றாள்; அவன் அன்று இரவு அவளோடே சயனித்தான்.

17. தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமாரனைப் பெற்றாள்.

18. அப்பொழுது லேயாள்: நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பேரிட்டாள்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 30