பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 8:1-15 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.

2. நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்பாயாகில், உன் எல்லை அடங்கலையும் தவளைகளால் வாதிப்பேன்.

3. நதி தவளைகளைத் திரளாய்ப் பிறப்பிக்கும்; அவைகள் உன் வீட்டிலும் உன் படுக்கை அறையிலும், உன் மஞ்சத்தின் மேலும், உன் ஊழியக்காரர் வீடுகளிலும், உன் ஜனங்களிடத்திலும், உன் அடுப்புகளிலும், மாப்பிசைகிற உன் தொட்டிகளிலும் வந்து ஏறும்.

4. அந்தத் தவளைகள் உன்மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் ஊழியக்காரர் எல்லார்மேலும் வந்து ஏறும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

5. மேலும் கர்த்தர் மோசேயினிடத்தில் நீ ஆரோனை நோக்கி: நீ உன் கையில் இருக்கிற கோலை நதிகள்மேலும், வாய்க்கால்கள்மேலும், குளங்கள்மேலும் நீட்டி, எகிப்துதேசத்தின்மேல் தவளைகளை வரும்படி செய் என்று சொல் என்றார்.

6. அப்படியே ஆரோன் தன் கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள்மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது.

7. மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரப்பண்ணினார்கள்.

8. பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; கர்த்தருக்குப் பலியிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன் என்றான்.

9. அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: தவளைகள் நதியிலே மாத்திரம் இருக்கத்தக்கதாய் அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படி செய்ய, உமக்காகவும் உம்முடைய ஊழியக்காரருக்காகவும் உம்முடைய ஜனங்களுக்காகவும் நான் விண்ணப்பம் பண்ணவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக என்றான்.

10. அதற்கு அவன்: நாளைக்கு என்றான். அப்பொழுது இவன்: எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒப்பானவர் இல்லை என்பதை நீர் அறியும்படிக்கு உம்முடைய வார்த்தையின்படி ஆகக்கடவது.

11. தவளைகள் உம்மையும், உம்முடைய வீட்டையும், உம்முடைய ஊழியக்காரரையும், உம்முடைய ஜனங்களையும் விட்டு நீங்கி, நதியிலே மாத்திரம் இருக்கும் என்றான்.

12. மோசேயும் ஆரோனும் பார்வோனை விட்டுப் புறப்பட்டார்கள். பார்வோனுக்கு விரோதமாக வரப்பண்ணின தவளைகள் நிமித்தம் மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.

13. கர்த்தர் மோசேயின் சொற்படி செய்தார்; வீடுகளிலும் முற்றங்களிலும் வயல்களிலும் இருந்த தவளைகள் செத்துப்போயிற்று.

14. அவைகளைக் குவியல் குவியலாகச் சேர்த்தார்கள்; அதினால் பூமியெங்கும் நாற்றம் எடுத்தது.

15. இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்; கர்த்தர் சொல்லியிருந்தபடி ஆயிற்று.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 8