பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 23:22-32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

22. நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன்.

23. என் தூதனானவர் உனக்குமுன்சென்று, எமோரியரும், ஏத்தியரும், பெரிசியரும், கானானியரும், ஏவியரும், எபூசியரும், இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன்.

24. நீ அவர்களுடைய தேவர்களைப்பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக.

25. உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன்.

26. கர்ப்பம் விழுகிறதும், மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை; உன் ஆயுசு நாட்களைப் பூரணப்படுத்துவேன்.

27. எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன் செல்லும்படி செய்வேன். நீ செல்லும் இடமெங்குமுள்ள ஜனங்கள் எல்லாரையும் கலங்கடித்து, உன் சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டப்பண்ணுவேன்.

28. உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன்.

29. தேசம் பாழாய்ப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாய்ப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஒரே வருஷத்திற்குள்ளே உன் முன்னின்று துரத்திவிடாமல்,

30. நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் உன் முன்னின்று துரத்திவிடுவேன்.

31. சிவந்த சமுத்திரம் தொடங்கி பெலிஸ்தரின் சமுத்திரம்வரைக்கும், வனாந்தரம் தொடங்கி நதிவரைக்கும் உன் எல்லையாயிருக்கும்படி செய்வேன்; நான் அந்தத் தேசத்தின் குடிகளை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய்.

32. அவர்களோடும் அவர்கள் தேவர்களோடும் நீ உடன்படிக்கைபண்ணாதிருப்பாயாக.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 23