பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நீதிமொழிகள் 4:11-27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

11. ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.

12. நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.

13. புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக்காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.

14. துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.

15. அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ.

16. பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோகும்.

17. அவர்கள் ஆகாமியத்தின் அப்பத்தைப் புசித்து, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள்.

18. நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்.

19. துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப்போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள்..

20. என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய்.

21. அவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்.

22. அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.

23. எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவவூற்று புறப்படும்.

24. வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.

25. உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது.

26. உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக.

27. வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே; உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக.

முழு அத்தியாயம் படிக்க நீதிமொழிகள் 4