பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 9:38-52 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

38. அதற்குச் சேபூல்: அபிமெலேக்கை நாம் சேவிக்கிறதற்கு அவன் யார் என்று நீ சொன்ன உன் வாய் இப்பொழுது எங்கே? நீ நிந்தித்த ஜனங்கள் அவர்கள் அல்லவா? இப்பொழுது நீ புறப்பட்டு, அவர்களோடே யுத்தம்பண்ணு என்றான்.

39. அப்பொழுது காகால் சீகேமின் மனுஷருக்கு முன்பாகப் புறப்பட்டுப்போய், அபிமெலேக்கோடே யுத்தம்பண்ணினான்.

40. அபிமெலேக்கு அவனைத் துரத்த, அவன் அவனுக்கு முன்பாக ஓடினான்; பட்டணவாசல் மட்டும் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்.

41. அபிமெலேக்கு அருமாவில் இருந்து விட்டான்; சேபூல் காகாலையும் அவன் சகோதரரையும் சீகேமிலே குடியிராதபடிக்குத் துரத்திவிட்டான்.

42. மறுநாளிலே ஜனங்கள் வெளியிலே வயலுக்குப் போனார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,

43. அவன் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு, அவர்களை மூன்று படையாக வகுத்து, வெளியிலே பதிவிருந்து, அந்த ஜனங்கள் பட்டணத்திலிருந்து புறப்பட்டு வருகிறதைக் கண்டு, அவர்கள்மேல் எழும்பி, அவர்களை வெட்டினான்.

44. அபிமெலேக்கும் அவனோடிருந்த படையும் பாய்ந்துவந்து, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றார்கள்; மற்ற இரண்டு படைகளோ வெளியிலிருக்கிற யாவர்மேலும் விழுந்து, அவர்களை வெட்டினார்கள்.

45. அபிமெலேக்கு அந்நாள் முழுதும் பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி, பட்டணத்தைப் பிடித்து, அதிலிருந்த ஜனங்களைக் கொன்று, பட்டணத்தை இடித்துவிட்டு, அதில் உப்பு விதைத்தான்.

46. அதைச் சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் கேள்விப்பட்டபோது, அவர்கள் பேரீத் தேவனுடைய கோவில் அரணுக்குள் பிரவேசித்தார்கள்.

47. சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் அங்கே கூடியிருக்கிறது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது,

48. அபிமெலேக்கு தன்னோடிருந்த எல்லா ஜனங்களோடுங்கூடச் சல்மோன் மலையில் ஏறி, தன் கையிலே கோடரியைப் பிடித்து, ஒரு மரத்தின் கொம்பை வெட்டி, அதை எடுத்து, தன் தோளின்மேல் போட்டுக்கொண்டு, தன்னோடிருந்த ஜனங்களை நோக்கி: நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கிறீர்களே, நீங்களும் தீவிரமாய் என்னைப்போலச் செய்யுங்கள் என்றான்.

49. அப்படியே சகல ஜனங்களும் அவரவர் ஒவ்வொரு கொம்பை வெட்டி, அபிமெலேக்குக்குப் பின்சென்று, அவைகளை அந்த அரணுக்கு அருகே போட்டு, அக்கினி கொளுத்தி அந்த அரணைச் சுட்டுப்போட்டார்கள்; அதினால் புருஷரும் ஸ்திரீகளும் ஏறக்குறைய ஆயிரம்பேராகிய சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் செத்தார்கள்.

50. பின்பு அபிமெலேக்கு தேபேசுக்குப் போய், அதற்கு விரோதமாய்ப் பாளயமிறங்கி, அதைப் பிடித்தான்.

51. அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்த துருக்கம் இருந்தது; அங்கே சகல புருஷரும் ஸ்திரீகளும் பட்டணத்து மனுஷர் அனைவரும் ஓடிப் புகுந்து, கதவைப் பூட்டிக்கொண்டு, துருக்கத்தின்மேல் ஏறினார்கள்.

52. அபிமெலேக்கு அந்தத் துருக்கம் மட்டும் வந்து, அதின்மேல் யுத்தம்பண்ணி, துருக்கத்தின் கதவைச் சுட்டெரித்துப் போடும்படிக்கு, அதின் கிட்டச் சேர்ந்தான்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 9