பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 8:9-21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

9. அப்பொழுது அவன், பெனூவேலின் மனுஷரைப் பார்த்து: நான் சமாதானத்தோடே திரும்பிவரும்போது, இந்தக் கோபுரத்தை இடித்துப்போடுவேன் என்றான்.

10. சேபாவும் சல்முனாவும் அவர்களோடேகூட அவர்களுடைய சேனைகளும் ஏறக்குறைய பதினையாயிரம்பேர் கர்கோரில் இருந்தார்கள்; பட்டயம் உருவத்தக்க லட்சத்து இருபதினாயிரம்பேர் விழுந்தபடியால், கிழக்கத்தியாரின் சகல சேனையிலும் இவர்கள் மாத்திரம் மீந்திருந்தார்கள்.

11. கிதியோன் கூடாரங்களிலே குடியிருக்கிறவர்கள் வழியாய் நோபாகுக்கும், யொகிபெயாவுக்கும் கிழக்கே போய், அந்தச் சேனை பயமில்லை என்றிருந்தபோது, அதை முறிய அடித்தான்.

12. சேபாவும் சல்முனாவும் ஓடிப்போனார்கள்; அவனோ அவர்களைத் தொடர்ந்து, சேபா சல்முனா என்னும் மீதியானியரின் இரண்டு ராஜாக்களையும் பிடித்து, சேனை முழுவதையும் கலங்கடித்தான்.

13. யோவாசின் குமாரனாகிய கிதியோன் யுத்தம்பண்ணி, சூரியன் உதிக்கும் முன்னே திரும்பிவந்தபோது,

14. சுக்கோத்தின் மனுஷரில் ஒரு வாலிபனைப் பிடித்து, அவனிடத்தில் விசாரித்தான்; அவன் சுக்கோத்தின் பிரபுக்களும் அதின் மூப்பருமாகிய எழுபத்தேழு மனுஷரின் பேரை அவனுக்கு எழுதிக்கொடுத்தான்.

15. அவன் சுக்கோத்து ஊராரிடத்தில் வந்து: இதோ, விடாய்த்திருக்கிற உன் மனுஷருக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன் கைவசமாயிற்றோ என்று நீங்கள் என்னை நிந்தித்துச் சொன்ன சேபாவும் சல்முனாவும் இங்கே இருக்கிறார்கள் என்று சொல்லி,

16. பட்டணத்தின் மூப்பரைப் பிடித்து, வனாந்தரத்தின் முள்ளுகளையும் நெரிஞ்சில்களையும் கொண்டுவந்து, அவைகளால் சுக்கோத்தின் மனுஷருக்குப் புத்திவரப்பண்ணி,

17. பெனூவேலின் கோபுரத்தை இடித்து, அவ்வூர் மனுஷரையும் கொன்றுபோட்டான்.

18. பின்பு அவன் சேபாவையும் சல்முனாவையும் நோக்கி: நீங்கள் தாபோரிலே கொன்றுபோட்ட அந்த மனுஷர் எப்படிப்பட்டவர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: நீர் எப்படிப்பட்டவரோ அவர்களும் அப்படிப்பட்டவர்களே; ஒவ்வொருவனும் பார்வைக்கு ராஜகுமாரனைப்போலிருந்தான் என்றார்கள்.

19. அப்பொழுது அவன்: அவர்கள் என் சகோதரரும் என் தாயின் பிள்ளைகளுமாயிருந்தார்கள்; அவர்களை உயிரோடே வைத்திருந்தீர்களானால். உங்களைக் கொல்லாதிருப்பேன் என்று கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி,

20. தன் மூத்தகுமாரனாகிய யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் இளைஞனானபடியால் பயந்து தன் பட்டயத்தை உருவாதிருந்தான்.

21. அப்பொழுது சேபாவும் சல்முனாவும்: நீரே எழுந்து எங்கள்மேல் விழும்; மனுஷன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த சாந்துக்காறைகளை எடுத்துக்கொண்டான்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 8