பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 4:15-24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

15. கர்த்தர் சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்; சிசெரா ரதத்தைவிட்டிறங்கி கால்நடையாய் ஓடிப்போனான்.

16. பாராக் ரதங்களையும் சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத்மட்டும் துரத்தினான்; சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை.

17. சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.

18. யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டுபோய்: உள்ளே வாரும்; என் ஆண்டவனே, என்னண்டை உள்ளே வாரும், பயப்படாதேயும் என்று அவனோடே சொன்னாள்; அப்படியே அவளண்டை கூடாரத்தில் உள்ளே வந்தபோது, அவனை ஒரு சமுக்காளத்தினாலே மூடினாள்.

19. அவன் அவளைப் பார்த்து; குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா, தாகமாயிருக்கிறேன் என்றான்; அவள் பால்துருத்தியைத் திறந்து, அவனுக்குக் குடிக்கக்கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள்.

20. அப்பொழுது அவன்: நீ கூடாரவாசலிலே நின்று, யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால், இல்லை என்று சொல் என்றான்.

21. பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெறியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய், தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான்.

22. பின்பு சிசெராவைத் தொடருகிற பாராக் வந்தான்; அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டுபோய்: வாரும், நீ தேடுகிற மனுஷனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள்; அவன் அவளிடத்திற்கு வந்தபோது, இதோ, சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவன் நெறியில் அடித்திருந்தது.

23. இப்படி தேவன் அந்நாளிலே கானானியரின் ராஜாவாகிய யாபீனை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தினார்.

24. இஸ்ரவேல் புத்திரரின் கை கானானியரின் ராஜாவாகிய யாபீனை நிர்மூலமாக்குமட்டும் அவன்மேல் பலத்துக்கொண்டேயிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 4