பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 19:23-30 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

23. அப்பொழுது வீட்டுக்காரனாகிய அந்த மனுஷன் வெளியே அவர்களிடத்தில் போய்: இப்படிச் செய்யவேண்டாம்; என் சகோதரரே, இப்படிப்பட்ட பொல்லாப்பைச் செய்யவேண்டாம்; அந்த மனுஷன் என் வீட்டிற்குள் வந்திருக்கையில், இப்படிக்கொத்த மதிகேட்டைச் செய்யீர்களாக.

24. இதோ, கன்னியாஸ்திரீயாகிய என் மகளும், அந்த மனிதனுடைய மறுமனையாட்டியும் இருக்கிறார்கள்; அவர்களை உங்களிடத்தில் வெளியே கொண்டுவருகிறேன்; அவர்களை அவமானப்படுத்தி, உங்கள் பார்வைக்குச் சரிபோனபிரகாரம் அவர்களுக்குச் செய்யுங்கள்; ஆனாலும் இந்த மனுஷனுக்கு அப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம் என்றான்.

25. அந்த மனுஷர் அவன் சொல்லைக்கேட்கவில்லை; அப்பொழுது அந்த மனுஷன் தன் மறுமனையாட்டியைப் பிடித்து, அவர்களிடத்தில் வெளியே கொண்டுவந்து விட்டான்; அவர்கள் அவளை அறிந்துகொண்டு, இராமுழுவதும் விடியுங்காலமட்டும் அவளை இலச்சையாய் நடத்தி, கிழக்கு வெளுக்கும்போது அவளைப்போகவிட்டார்கள்.

26. விடியுங்காலத்திற்கு முன்னே அந்த ஸ்திரீ வந்து, வெளிச்சமாகுமட்டும் அங்கே தன் எஜமான் இருந்த வீட்டுவாசற்படியிலே விழுந்துகிடந்தாள்.

27. அவள் எஜமான் காலமே எழுந்திருந்து வீட்டின் கதவைத் திறந்து, தன் வழியே போகப் புறப்படுகிறபோது, இதோ, அவன் மறுமனையாட்டியாகிய ஸ்திரீ வீட்டுவாசலுக்கு முன்பாகத் தன் கைகளை வாசற்படியின்மேல் வைத்தவளாய்க் கிடந்தாள்.

28. எழுந்திரு போவோம் என்று அவன் அவளோடே சொன்னதற்குப் பிரதியுத்தரம் பிறக்கவில்லை. அப்பொழுது அந்த மனுஷன் அவளைக் கழுதையின்மேல் போட்டுக்கொண்டு, பிரயாணப்பட்டு, தன் இடத்திற்குப் போனான்.

29. அவன் தன் வீட்டுக்கு வந்தபோது, ஒரு கத்தியை எடுத்து, தன் மறுமனையாட்டியைப் பிடித்து, அவளை அவளுடைய எலும்புகளோடுங்கூடப் பன்னிரண்டு துண்டமாக்கி, இஸ்ரவேலின் எல்லைகளுக்கெல்லாம் அனுப்பினான்.

30. அப்பொழுது அதைக் கண்டவர்களெல்லாரும், இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள் முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் இதைப்போலொத்த காரியம் செய்யப்படவும் இல்லை, காணப்படவும் இல்லை; இந்தக் காரியத்தை யோசித்து ஆலோசனைபண்ணி செய்யவேண்டியது இன்னதென்று சொல்லுங்கள் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 19