பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 13:13-24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

13. கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நான் ஸ்திரீயோடே சொன்ன யாவற்றிற்கும், அவள் எச்சரிக்கையாயிருந்து,

14. திராட்சச்செடியிலே உண்டாகிறதொன்றும் சாப்பிடாமலும், திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானதொன்றும் புசியாமலும், நான் அவளுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் கைக்கொள்ளக்கடவள் என்றார்.

15. அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை உமக்காகச் சமைத்துக்கொண்டுவருமட்டும் தரித்திரும் என்றான்.

16. கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன் உணவைப் புசியேன்; நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானால், அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்.

17. அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மைக் கனம்பண்ணும்படி, உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான்.

18. அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்: என் நாமம் என்ன என்று நீ கேட்க வேண்டியது என்ன? அது அதிசயம் என்றார்.

19. மனோவா போய், வெள்ளாட்டுக்குட்டியையும், போஜனபலியையும் கொண்டுவந்து, அதைக் கன்மலையின்மேல் கர்த்தருக்குச் செலுத்தினான்; அப்பொழுது மனோவாவும் அவன் மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கையில், அதிசயம் விளங்கினது.

20. அக்கினிஜூவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்புகையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜூவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள்.

21. பின்பு கர்த்தருடைய தூதனானவர் மனோவாவுக்கும் அவன் மனைவிக்கும் காணப்படவில்லை; அப்பொழுது அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறிந்து,

22. தன் மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், சாகவே சாவோம் என்றான்.

23. அதற்கு அவன் மனைவி: கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்கதகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார், இவைகளையெல்லாம் நமக்குக் காண்பிக்கவுமாட்டார், இவைகளை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள்.

24. பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 13