பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 11:27-40 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

27. நான் உமக்கு விரோதமாய்க் குற்றம் செய்யவில்லை; நீர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறதினால் நீர்தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்; நியாயாதிபதியாகிய கர்த்தர் இன்று இஸ்ரவேல் புத்திரருக்கும் அம்மோன் புத்திரருக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான்.

28. ஆனாலும் அம்மோன் புத்திரரின் ராஜா தனக்கு யெப்தா சொல்லியனுப்பின வார்த்தைகளுக்குச் செவிகொடாதே போனான்.

29. அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் புத்திரருக்கு விரோதமாகப் போனான்.

30. அப்பொழுது யெப்தா கர்த்தருக்கு ஒரு பொருத்தனையைப்பண்ணி: தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால்,

31. நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பி வரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும், அதைச் சர்வாங்கதகனபலியாகச் செலுத்துவேன் என்றான்.

32. யெப்தா அம்மோன் புத்திரரின்மேல் யுத்தம்பண்ண, அவர்களுக்கு விரோதமாய்ப் புறப்பட்டுப்போனான்; கர்த்தர் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்.

33. அவன் அவர்களை ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகுமட்டும், திராட்சத்தோட்டத்து நிலங்கள்வரைக்கும், மகா சங்காரமாய் முறிய அடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்; இப்படி அம்மோன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்.

34. யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன் வீட்டுக்கு வருகிறபோது, இதோ, அவன் குமாரத்தி தம்புரு வாசித்து நடனஞ்செய்து, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளையானவள்; அவளையல்லாமல் அவனுக்குக் குமாரனும் இல்லை குமாரத்தியும் இல்லை.

35. அவன் அவளைக் கண்டவுடனே தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது என்றான்.

36. அப்பொழுது அவள்: என் தகப்பனே, நீர் கர்த்தரை நோக்கி உம்முடைய வாயைத் திறந்து பேசினீரல்லவோ? அம்மோன் புத்திரராகிய உம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும் ஜெயத்தைக் கர்த்தர் உமக்குக் கட்டளையிட்டபடியினால், உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும் என்றாள்.

37. பின்னும் அவள் தன் தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்யவேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த்திரிந்து, நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டு மாதம் தவணைகொடும் என்றாள்.

38. அதற்கு அவன்: போய்வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி,

39. இரண்டு மாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள்.

40. இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய், நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 11