பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நியாயாதிபதிகள் 1:12-27 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

12. அப்பொழுது காலேப்: கீரியாத்செப்பேரை சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக் கொடுப்பேன் என்றான்.

13. அப்பொழுது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் குமாரன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தியாகிய அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக் கொடுத்தான்.

14. அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளை நோக்கி: உனக்கு என்னவேண்டும் என்றான்.

15. அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப்: மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.

16. மோசேயின் மாமனாகிய கேனியனின் புத்திரரும் யூதாவின் புத்திரரோடேகூடப் பேரீச்சம்மரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கேயிருக்கிற யூதாவின் வனாந்தரத்திற்கு வந்து, ஜனங்களோடே குடியேறினார்கள்.

17. யூதா தன் சகோதரனாகிய சிமியோனோடுங்கூடப் போனான்; அவர்கள் சேப்பாத்தில் குடியிருக்கிற கானானியரை முறிய அடித்து, அதைச் சங்காரம்பண்ணி, அந்தப் பட்டணத்திற்கு ஒர்மா என்று பேரிட்டார்கள்.

18. யூதா காசாவையும் அதின் எல்லையையும், அஸ்கலோனையும் அதின் எல்லையையும், எக்ரோனையும் அதின் எல்லையையும் பிடித்தான்.

19. கர்த்தர் யூதாவோடேகூட இருந்ததினால், மலைத்தேசத்தாரைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இருப்பு ரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்தக்கூடாமற்போயிற்று.

20. மோசே சொன்னபடியே, எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று குமாரரையும் துரத்திவிட்டான்.

21. பென்யமீன் புத்திரர் எருசலேமிலே குடியிருந்த எபூசியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் எபூசியர் இந்நாள் மட்டும் பென்யமீன் புத்திரரோடேகூட எருசலேமில் குடியிருக்கிறார்கள்.

22. யோசேப்பின் குடும்பத்தாரும் பெத்தேலுக்கு விரோதமாய்ப் போனார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருந்தார்.

23. யோசேப்பின் புத்திரர் பெத்தேலை வேவுபார்க்க ஆட்களை அனுப்பினார்கள்; முன்னே அந்தப் பட்டணத்திற்கு லூஸ் என்று பேர்.

24. அந்த வேவுகாரர் பட்டணத்திலிருந்து புறப்பட்டுவருகிற ஒரு மனுஷனைக் கண்டு: பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை எங்களுக்குக் காண்பி, உனக்குத் தயைசெய்வோம் என்றார்கள்.

25. அப்படியே பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை அவர்களுக்குக் காண்பித்தான்; அப்பொழுது அவர்கள் வந்து, பட்டணத்திலுள்ளவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அந்த மனுஷனையும் அவன் குடும்பத்தையும் விட்டுவிட்டார்கள்.

26. அப்பொழுது அந்த மனுஷன் ஏத்தியரின் தேசத்திற்குப் போய், ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு லூஸ் என்று பேரிட்டான்; அதுதான் இந்நாள்மட்டும் அதின் பேர்.

27. மனாசே கோத்திரத்தார் பெத்செயான் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தானாக் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தோரின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், இப்லெயாம் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், மெகிதோவின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும் துரத்திவிடவில்லை; கானானியர் அந்த தேசத்திலேதானே குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க நியாயாதிபதிகள் 1