பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

சங்கீதம் 22:8-21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

8. கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்கிறார்கள்.

9. நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என் தாயின் மார்பில் இருக்கும் போதே என்னை உம்மேல் நம்பிக்கையாய் இருக்கப்பண்ணினீர்.

10. கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்.

11. என்னைவிட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து நெருங்கியிருக்கிறது, சகாயரும் இல்லை.

12. அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டன.

13. பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்.

14. தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டன, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.

15. என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.

16. நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கினறன; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.

17. என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

18. என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போடுகிறார்கள்.

19. ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்.

20. என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் கொடூரத்திற்க்கும் தப்புவியும்.

21. என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் பதிலருளினீர்.

முழு அத்தியாயம் படிக்க சங்கீதம் 22