பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 49:25-39 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

25. சந்தோஷமான என் ஊராகிய அந்தப் புகழ்ச்சியுள்ள நகரம் தப்பவிடப்படாமற்போயிற்றே!

26. ஆதலால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுந்து, யுத்த மனுஷர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

27. தமஸ்குவின் மதில்களில் தீக்கொளுத்துவேன்; அது பெனாதாத்தின் அரமனைகளைப் பட்சிக்கும் என்கிறார்.

28. பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முறியடிக்கும் கேதாரையும் காத்சோருடைய இராஜ்யங்களையும் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எழுப்பி, கேதாருக்கு விரோதமாகப் போய், கீழ்த்திசைப் புத்திரரைப்பாழாக்குங்கள்.

29. அவர்களுடைய கூடாரங்களையும் அவர்களுடைய மந்தைகளையும் வாங்கி, அவர்களுடைய திரைகளையும் அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் அவர்களுடைய ஒட்டகங்களையும் தங்களுக்கென்று கொண்டுபோய், எத்திசையும் பயம் என்று சொல்லி, அவர்கள்மேல் ஆர்ப்பரிப்பார்கள்.

30. காத்சோரின் குடிகளே, ஓடி, தூரத்தில் அலையுங்கள்; பள்ளத்தில் ஒதுங்கிப் பதுங்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் உங்களுக்கு விரோதமாக ஆலோசனைசெய்து, உங்களுக்கு விரோதமாக உபாயங்களைச் சிந்தித்திருக்கிறான்.

31. அஞ்சாமல் நிர்விசாரமாய்க் குடியிருக்கிற ஜாதிக்கு விரோதமாக எழும்பிப்போங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு வாசல்களுமில்லை, தாழ்ப்பாள்களுமில்லை; அவர்கள் தனிப்படத் தங்கியிருக்கிறார்கள்.

32. அவர்களுடைய ஒட்டகங்கள் கொள்ளையும், அவர்களுடைய ஆடுமாடுகளின் ஏராளம் சூறையுமாகும்; நான் அவர்களைச் சகல திசைகளுமான கடையாந்தர மூலைகளில் இருக்கிறவர்களிடத்துக்குச் சிதறடித்துவிட்டு, அதினுடைய சகல பக்கங்களிலுமிருந்து அவர்களுக்கு ஆபத்தை வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

33. ஆத்சோர் வலுசர்ப்பங்களின் தாபரமாகி, என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கும்; ஒருவனும் அங்கே குடியிருப்பதில்லை, ஒரு மனுபுத்திரனும் அதிலே தங்குவதுமில்லையென்கிறார்.

34. யூதா ராஜாவாகிய சிதேக்கியாவினுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, ஏலாமுக்கு விரோதமாக எரேமியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:

35. சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ஏலாமின் வில்லென்னும் அவர்களுடைய பிரதான வல்லமையை முறித்துப்போட்டு,

36. வானத்தின் நாலு திசைகளிலுமிருந்து நாலு காற்றுகளை ஏலாமின்மேல் வரப்பண்ணி, அவர்களை இந்த எல்லாத்திசைகளிலும் சிதறடிப்பேன்; ஏலாம் தேசத்திலிருந்து துரத்துண்டவர்கள் சகல ஜாதிகளிலும் சிதறப்படுவார்கள்.

37. நான் ஏலாமியரை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களுக்கு முன்பாகவும் கலங்கப்பண்ணி, என் கோபத்தின் உக்கிரமாகிய தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை நிர்மூலமாக்குமட்டும் பட்டயத்தை அவர்களுக்குப் பின்னாக அனுப்பி,

38. என் சிங்காசனத்தை ஏலாமிலே வைத்து, அங்கேயிருந்து ராஜாவையும் பிரபுக்களையும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

39. ஆனாலும் கடைசி நாட்களிலே நான் ஏலாமின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 49