பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 20:8-17 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

8. நான் பேசினது முதற்கொண்டு கதறுகிறேன்; கொடுமையென்றும் பாழ்க்கடிப்பென்றும் சத்தமிட்டுக் கூறுகிறேன்; நான் கூறின கர்த்தருடைய வார்த்தை நாள்தோறும் எனக்கு நிந்தையும், பரிகாசமுமாயிற்று.

9. ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று.

10. அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன், பயம் சூழ்ந்திருந்தது; அறிவியுங்கள், அப்பொழுது நாங்கள் அதை அறிவிப்போம் என்கிறார்கள்; என்னோடே சமாதானமாயிருந்த அனைவரும் நான் தவறிவிழும்படிக் காத்திருந்து: ஒருவேளை இணங்குவான், அப்பொழுது அவனை மேற்கொண்டு, அவனில் குரோதந்தீர்த்துக்கொள்வோம் என்கிறார்கள்.

11. கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும்.

12. ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் சாட்டிவிட்டேன்.

13. கர்த்தரைப் பாடுங்கள், கர்த்தரைத் துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்.

14. நான் பிறந்த நாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக.

15. உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்ததென்றும் என் தகப்பனுக்கு நற்செய்தியாக அறிவித்து, அவனை மிகவும் சந்தோஷப்படுத்தின மனுஷன் சபிக்கப்படக்கடவன்.

16. அந்த மனுஷன், கர்த்தர் மனம்மாறாமல் கவிழ்த்துப்போட்ட பட்டணங்களைப்போலிருந்து, காலமே அலறுதலையும் மத்தியான வேளையிலே கூக்குரலையும் கேட்கக்கடவன்.

17. என் தாயார் எனக்குப் பிரேதக்குழியும், நான் என்றைக்கும் பிரசவியாத சூலுமாய் இருக்கத்தக்கதாகக் கர்ப்பத்திலே நான் கொலைசெய்யப்படாமற்போனதென்ன?

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 20