பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 7:1-16 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. மோசே வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணி, அதையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், பலிபீடத்தையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி முடித்த நாளில்,

2. தங்கள் பிதாக்களுடைய வம்சத்தலைவரும், எண்ணப்பட்டவர்களின் விசாரிப்புக்கு வைக்கப்பட்ட கோத்திரப் பிரபுக்களுமாகிய இஸ்ரவேலின் பிரபுக்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.

3. தங்கள் காணிக்கையாக, ஆறு கூண்டு வண்டில்களையும், பன்னிரண்டு மாடுகளையும் இரண்டிரண்டு பிரபுக்களுக்கு ஒவ்வொரு வண்டிலும், ஒவ்வொரு பிரபுக்கு ஒவ்வொரு மாடுமாக, கர்த்தருக்குச் செலுத்த வாசஸ்தலத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.

4. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி:

5. நீ அவர்களிடத்தில் ஆசரிப்புக் கூடாரத்தின் ஊழியத்திற்காக அவைகளை வாங்கி. லேவியருக்கு அவரவர் வேலைக்குத் தக்கவைகளாகப் பங்கிட்டுக் கொடு என்றார்.

6. அப்பொழுது மோசே அந்த வண்டில்களையும் மாடுகளையும் வாங்கி, லேவியருக்குக் கொடுத்தான்.

7. இரண்டு வண்டில்களையும் நான்கு மாடுகளையும் கெர்சோன் புத்திரருக்கு, அவர்கள் வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான்.

8. நான்கு வண்டில்களையும் எட்டு மாடுகளையும் மெராரியின் புத்திரருக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் இத்தாமாருடைய கையின் கீழிருக்கிற அவர்களுடைய வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான்.

9. கோகாத்தின் புத்திரருக்கோ ஒன்றும் கொடுக்கவில்லை; தோள்மேல் சுமப்பதே அவர்களுக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் வேலையாயிருந்தது.

10. பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட நாளிலே, பிரபுக்கள் அதின் பிரதிஷ்டைக்காகக் காணிக்கைகளைச் செலுத்தி, பலிபீடத்துக்கு முன்பாகத் தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்.

11. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பலிபீடத்தின் பிரதிஷ்டைக்காக ஒவ்வொரு பிரபுவும் தன்தன் நாளில் தன்தன் காணிக்கையைச் செலுத்தக்கடவன் என்றார்.

12. அப்படியே முதலாம் நாளில் தன் காணிக்கையைச் செலுத்தினவன் யூதா கோத்திரத்தானாகிய அம்மினதாபின் குமாரன் நகசோன்.

13. அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும்,

14. தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும்,

15. சர்வாங்கதகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒருவயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,

16. பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும்,

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 7