பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எண்ணாகமம் 18:18-32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

18. அசைவாட்டும் மார்க்கண்டத்தைப்போலும் வலது முன்னந்தொடையைப்போலும் அவைகளின் மாம்சமும் உன்னுடையதாகும்.

19. இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கிற பரிசுத்த படைப்புகளையெல்லாம் உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்; கர்த்தருடைய சந்நிதியில் இது உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை என்றார்.

20. பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம், அவர்கள் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம்; இஸ்ரவேல் புத்திரர் நடுவில் நானே உன் பங்கும் உன் சுதந்தரமுமாய் இருக்கிறேன்.

21. இதோ, லேவியின் புத்திரர் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்.

22. இஸ்ரவேல் புத்திரர் குற்றஞ்சுமந்து சாகாதபடிக்கு, இனி ஆசரிப்புக் கூடாரத்தைக் கிட்டாதிருக்கக்கடவர்கள்.

23. லேவியர் மாத்திரம் ஆசரிப்புக் கூடாரத்துக்கடுத்த வேலைகளைச் செய்யவேண்டும்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; இஸ்ரவேல் புத்திரர் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் இல்லை என்பது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும்.

24. இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன் என்றார்.

25. பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

26. நீ லேவியரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது. தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கைக் கர்த்தருக்கு ஏறெடுத்துப்படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.

27. நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும் இந்தப் படைப்பு களத்தின் தானியத்தைப்போலும், ஆலையின் இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும்.

28. இப்படியே நீங்கள் இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கும் தசமபாகமாகிய உங்கள் பங்குகளிலெல்லாம் நீங்களும் கர்த்தருக்கு என்று ஒரு படைப்பை ஏறெடுத்துப் படைத்து, அந்தப் படைப்பை ஆசாரியனாகிய ஆரோனுக்குக் கொடுக்கவேண்டும்.

29. உங்களுக்குக் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு காணிக்கையிலுமுள்ள உச்சிதமான பரிசுத்த பங்கையெல்லாம் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும்.

30. ஆதலால் நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அதில் உச்சிதமானதை நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும்போது, அது களத்தின் வரத்திலும் ஆலையின் வரத்திலும் இருந்து எடுத்துச்செலுத்துகிறதுபோல லேவியருக்கு எண்ணப்படும்.

31. அதை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எவ்விடத்திலும் புசிக்கலாம்; அது நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு ஈடான உங்கள் சம்பளம்.

32. இப்படி அதில் உச்சிதமானதை ஏறெடுத்துப் படைத்தீர்களானால், நீங்கள் அதினிமித்தம் பாவம் சுமக்கமாட்டீர்கள்; நீங்கள் சாகாதிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரரின் பரிசுத்தமானவைகளைத் தீட்டுப்படுத்தலாகாது என்று சொல் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 18