பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 40:1-9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. நாங்கள் சிறைப்பட்டுப்போன இருபத்தைந்தாம் வருஷத்தின் ஆரம்பத்தில் முதலாம் மாதம் பத்தாந்தேதியாகிய அன்றே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்தது, அவர் என்னை அவ்விடத்துக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது நகரம் அழிக்கப்பட்டுப் பதினாலு வருஷமாயிற்று.

2. தேவதரிசனங்களில் அவர் என்னை இஸ்ரவேல் தேசத்துக்குக் கொண்டுபோய், என்னை மகா உயரமான ஒரு மலையின்மேல் நிறுத்தினார்; அதின்மேல் தெற்காக ஒரு நகரம் கட்டியிருக்கிறதுபோல் காணப்பட்டது.

3. அவர் என்னை அங்கே கொண்டுபோனார்; இதோ, அங்கே ஒரு புருஷன் இருந்தார்; அவருடைய தோற்றம் வெண்கலமாயிருந்தது; அவர் கையில் சணற்கயிறும் ஒரு அளவுகோலும் இருந்தது; அவர் வாசலிலே நின்றார்.

4. அந்தப் புருஷன் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ கண்ணாரப்பார்த்து, காதாரக்கேட்டு, நான் உனக்குக் காண்பிப்பதெல்லாவற்றின்மேலும் உன் மனதை வை; நான் உனக்கு அவைகளைக் காண்பிக்கும்படி நீ இங்கே கொண்டுவரப்பட்டாய்; நீ காண்பதையெல்லாம் இஸ்ரவேல் வம்சத்தாருக்குத் தெரிவி என்றார்.

5. இதோ, ஆலயத்துக்குப் புறம்பே சுற்றிலும் ஒரு மதில் இருந்தது; அந்தப் புருஷன் கையிலே ஆறுமுழ நீளமான ஒரு அளவுகோல் இருந்தது; ஒவ்வொரு முழமும் நமது கைமுழத்திலும் நாலு விரற்கடை அதிகமானது; அவர் அந்த மதிலை அளந்தார்; அகலம் ஒரு கோலாகவும் உயரம் ஒரு கோலாகவும் இருந்தது.

6. பின்பு அவர் கிழக்குமுகவாசலுக்கு வந்து, அதின் படிகளின்மேல் ஏறி, வாசற்படியை ஒரு கோல் அகலமாகவும், மறுவாசற்படியை ஒரு கோல் அகலமாகவும் அளந்தார்.

7. ஒவ்வொரு அறையும் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமுமாயிருந்தது; அறைவீடுகளுக்கு நடுவே ஐந்து முழ இடம் விட்டிருந்தது; வாசலின் மண்டபத்தருகே உள்வாசற்படி ஒரு கோலளவாயிருந்தது.

8. வாசலின் மண்டபத்தையும் உள்ளே கோலளவாக அளந்தார்.

9. பின்பு வாசலின் மண்டபத்தை எட்டுமுழமாகவும், அதின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும் அளந்தார்; வாசலின் மண்டபம் உட்புறத்திலிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 40