பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 36:28-38 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

28. உங்கள் பிதாக்களுக்கு நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள்; நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருந்து,

29. உங்கள் அசுத்தங்களையெல்லாம் நீக்கி, உங்களை இரட்சித்து, உங்கள்மேல் பஞ்சத்தைக் கட்டளையிடாமல், கோதுமையை வரவழைத்து, அதைப் பெருகப்பண்ணி,

30. நீங்கள் இனிமேல் ஜாதிகளுக்குள்ளே பஞ்சத்தினாலுண்டாகும் நிந்தையை அடையாதபடிக்கு, விருட்சத்தின் கனிகளையும் வயலின் பலன்களையும் பெருகப்பண்ணுவேன்.

31. அப்பொழுது நீங்கள் உங்கள் பொல்லாத மார்க்கங்களையும் உங்கள் தகாத கிரியைகளையும் நினைத்து, உங்கள் அக்கிரமங்களினிமித்தமும் உங்கள் அருவருப்புகளினிமித்தமும் உங்களையே அரோசிப்பீர்கள்.

32. நான் இப்படிச் செய்வது உங்கள் நிமித்தமாக அல்லவென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், இது உங்களுக்கு அறியப்பட்டிருக்கக்கடவது; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் வழிகளினிமித்தம் வெட்கி நாணுங்கள்.

33. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உங்கள் அக்கிரமங்களையெல்லாம் நீக்கி, உங்களைச் சுத்தமாக்கும் காலத்திலே பட்டணங்களில் குடியேற்றுவிப்பேன்; அவாந்தரமான ஸ்தலங்களும் கட்டப்படும்.

34. பாழாக்கப்பட்ட தேசம் கடந்துபோகிற யாவருடைய பார்வைக்கும் பாழாய்க்கிடந்ததற்குப் பதிலாக பயிரிடப்படும்.

35. பாழாய்க்கிடந்த இத்தேசம், ஏதேன் தோட்டத்தைப்போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாய் இருக்கிறது என்றும் சொல்லுவார்கள்.

36. கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும், அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான ஜாதிகள் அறிந்துகொள்வார்கள்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன்.

37. கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம்பண்ணவேண்டும்; மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதரைப் பெருகப்பண்ணுவேன்.

38. பண்டிகை காலங்களில் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணப்பட்டுவருகிற மந்தைகள் எப்படித் திரளாயிருக்கிறதோ, அப்படியே அவாந்தரமாயிருந்த பட்டணங்கள் மனுஷரின் மந்தையால் நிரம்பியிருக்கும்; அதினால் நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 36