பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எசேக்கியேல் 33:17-31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

17. உன் ஜனத்தின் புத்திரரோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறார்கள்; அவர்களுடைய வழியே செம்மையானதல்ல.

18. நீதிமான் தன் நீதியைவிட்டுத்திரும்பி, அநியாயஞ்செய்தால், அவன் அதினால் சாவான்.

19. துன்மார்க்கன் தன் அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான்.

20. நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறீர்கள், இஸ்ரவேல் வீட்டாரே, நான் உங்களில் ஒவ்வொருவனையும் அவனவன் வழிகளின்படியே நியாயந்தீர்ப்பேன் என்று சொல் என்றார்.

21. எங்கள் சிறையிருப்பின் பன்னிரண்டாம் வருஷம் பத்தாம் மாதம் ஐந்தாந்தேதியிலே எருசலேமிலிருந்து தப்பின ஒருவன் என்னிடத்தில் வந்து: நகரம் அழிக்கப்பட்டது என்றான்.

22. தப்பினவன் வருகிறதற்கு முந்தின சாயங்காலத்திலே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, அவன் காலையில் என்னிடத்தில் வருமட்டும் என் வாயைத் திறந்திருக்கப்பண்ணிற்று; என் வாய் திறக்கப்பட்டது, பின்பு நான் மௌனமாயிருக்கவில்லை.

23. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:

24. மனுபுத்திரனே, இஸ்ரவேல் தேசத்தின் பாழான இடங்களிலுள்ள குடிகள்: ஆபிரகாம் ஒருவனாயிருந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டான்; நாங்கள் அநேகராயிருக்கிறோம், எங்களுக்கு இந்த தேசம் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டது என்று சொல்லுகிறார்கள்.

25. ஆகையால், நீ அவர்களை நோக்கி: நீங்கள் இரத்தத்தோடே கூடியதைத் தின்று, உங்கள் நரகலான விக்கிரகங்களுக்கு நேராக உங்கள் கண்களை ஏறெடுத்து, இரத்தத்தைச் சிந்தியிருக்கிறீர்கள், நீங்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்களோ?

26. நீங்கள் உங்கள் பட்டயத்தை நம்பிக்கொண்டு, அருவருப்பானதைச் செய்து, உங்களில் அவனவன் தன்தன் அயலான் மனைவியைத் தீட்டுப்படுத்துகிறீர்கள்; நீங்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்களோ என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.

27. நீ அவர்களை நோக்கி: பாழான இடங்களில் இருக்கிறவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; வெளிகளில் இருக்கிறவனை மிருகங்களுக்கு இரையாக ஒப்புக்கொடுப்பேன்; கோட்டைகளிலும் கெபிகளிலும் இருக்கிறவர்கள் கொள்ளைநோயால் சாவார்கள்.

28. நான் தேசத்தைப் பாழும் அவாந்தரமுமாக்குவேன்; அப்பொழுது அதினுடைய பெலத்தின் பெருமை ஒழிந்துபோகும்; அப்பொழுது இஸ்ரவேலின் மலைகள் கடந்துபோவாரில்லாமல் அவாந்தரமாய்க்கிடக்கும்.

29. அவர்கள் செய்த அவர்களுடைய எல்லா அருவருப்புக்களினிமித்தமும் நான் தேசத்தைப் பாழும் அவாந்தரமுமாக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள், இதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு.

30. மேலும் மனுபுத்திரனே, உன் ஜனத்தின் புத்திரர் சுவர் ஓரங்களிலும் வீட்டுவாசல்களிலும் உன்னைக்குறித்துப்பேசி, கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட வார்த்தை என்னவென்று கேட்போம் வாருங்கள் என்று ஒருவரோடொருவரும் சகோதரனோடே சகோதரனும் சொல்லி,

31. ஜனங்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ஜனங்கள்போல் உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய்ப் பேசுகிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப்போகிறது.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 33