பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

உபாகமம் 18:1-13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. லேவியராகிய ஆசாரியருக்கும் லேவிகோத்திரத்தார் அனைவருக்கும் இஸ்ரவேல் புத்திரருடன் பங்கும் சுதந்தரமும் இல்லாதிருப்பதாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளையும் அவருக்குச் சுதந்தரமானவைகளையும் அவர்கள் புசிப்பார்களாக.

2. அவர்கள் சகோதரருக்குள்ளே அவர்களுக்குச் சுதந்தரமில்லை; கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியபடியே, அவரே அவர்கள் சுதந்தரம்.

3. ஜனத்தினிடத்தில் பெற்றுக்கொள்ளவேண்டிய ஆசாரியருக்குரிய வரத்தாவது: ஜனங்கள் பலியிடும் ஆடுமாடுகளில் முன்னந்தொடையையும், தாடைகளையும், இரைப்பைகளையும் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும்.

4. உன் தானியம், திராட்சரசம், எண்ணெய், ஆட்டுரோமம் என்னும் இவைகளின் முதற்பலனையும் அவனுக்குக் கொடுக்கவேண்டும்.

5. அவனும் அவன் குமாரரும் எந்நாளும் கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஆராதனை செய்யும்படி நிற்கும்பொருட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரத்தார் எல்லாருக்குள்ளும் அவனையே தெரிந்துகொண்டார்.

6. இஸ்ரவேலில் எவ்விடத்திலுமுள்ள உன் வாசல்கள் யாதொன்றிலே தங்கின ஒரு லேவியன் அவ்விடத்தை விட்டு, கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தானத்திற்கு மனப்பூர்வமாய் வந்தால்,

7. அங்கே கர்த்தருடைய சந்நிதியில் நிற்கும் லேவியராகிய தன் எல்லாச் சகோதரரைப்போலும் தன் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஊழியஞ்செய்வான்.

8. அப்படிப்பட்டவர்கள் தங்கள் பிதாக்களுடைய ஆஸ்தியின் விலைக்கிரயத்தை அநுபவிக்கிறதும் அல்லாமல், சாப்பாட்டிற்காகச் சமமானபாகத்தையும் பெற்றுக்கொள்வார்கள்.

9. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேரும்போது, அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டாம்.

10. தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள் பார்க்கிறவனும், அஞ்சனம்பார்க்கிறவனும், சூனியக்காரனும்,

11. மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம்.

12. இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார்.

13. உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 18