பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 8:1-11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

1. தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.

2. ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோயிற்று.

3. ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; நூற்றைம்பது நாளுக்குப்பின்பு ஜலம் வடிந்தது.

4. ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று.

5. பத்தாம் மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டே வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன.

6. நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து,

7. ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது.

8. பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான்.

9. பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப்பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.

10. பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான்.

11. அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்துபோயிற்று என்று அறிந்தான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 8