பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 31:7-20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

7. உங்கள் தகப்பனோ, என்னை வஞ்சித்து, என் சம்பளத்தைப் பத்துமுறை மாற்றினான்; ஆனாலும் அவன் எனக்குத் தீங்குசெய்ய தேவன் அவனுக்கு இடங்கொடுக்கவில்லை.

8. புள்ளியுள்ளவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டது; கலப்புநிறமானவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் கலப்பு நிறக் குட்டிகளைப் போட்டது.

9. இவ்விதமாய் தேவன் உங்கள் தகப்பனுடைய ஆடுகளை எடுத்து, எனக்குத் தந்தார்.

10. ஆடுகள் பொலியும் காலத்திலே நான் கண்ட சொப்பனத்தில் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, ஆடுகளோடே பொலியும் கடாக்கள் கலப்புநிறமும் புள்ளியும் வரியும் உள்ளவைகளாயிருக்கக் கண்டேன்.

11. அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில்: யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன்.

12. அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார்; ஆடுகளோடே பொலியும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாய் இருக்கிறது; லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன்.

13. நீ தூணுக்கு அபிஷேகஞ்செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே; இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான்.

14. அதற்கு ராகேலும் லேயாளும்: எங்கள் தகப்பன் வீட்டிலே இனி எங்களுக்குப் பங்கும் சுதந்தரமும் உண்டோ?

15. அவரால் நாங்கள் அந்நியராய் எண்ணப்படவில்லையா? அவர் எங்களை விற்று, எங்கள் பணத்தையும் வாயிலே போட்டுக்கொண்டார்.

16. ஆகையால் தேவன் எங்கள் தகப்பனிடத்திலிருந்து எடுத்த ஐசுவரியம் எல்லாம் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் உரியது; இப்படியிருக்க, தேவன் உமக்குச் சொன்னபடியெல்லாம் செய்யும் என்றார்கள்.

17. அப்பொழுது யாக்கோபு எழுந்து, தன் பிள்ளைகளையும் தன் மனைவிகளையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றி,

18. தான் பதான் அராமிலே சம்பாதித்த மிருகஜீவன்களாகிய மந்தைகள் அனைத்தையும் தன் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, கானான் தேசத்தில் இருக்கிற தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்துக்குப் போகப் புறப்பட்டான்.

19. லாபான், தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்; அந்தச் சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள்.

20. யாக்கோபு தான் ஓடிப்போகிறதைச் சீரியனாகிய லாபானுக்கு அறிவியாமல், திருட்டளவாய்ப் போய்விட்டான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 31