பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 31:27-45 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

27. நீ ஓடிப்போவதை மறைத்து, எனக்கு அறிவியாமல், திருட்டளவாய் என்னிடத்திலிருந்து வந்துவிட்டது என்ன? நான் உன்னைச் சந்தோஷமாய், சங்கீதம் மேளதாளம் கின்னரமுழக்கத்துடனே அனுப்புவேனே.

28. என் பிள்ளைகளையும் என் குமாரத்திகளையும் நான் முத்தஞ்செய்ய விடாமல் போனதென்ன? இந்தச் செய்கையை நீ மதியில்லாமல் செய்தாய்.

29. உங்களுக்குப் பொல்லாப்புச்செய்ய எனக்கு வல்லமை உண்டு; ஆகிலும், உங்கள் தகப்பனுடைய தேவன்: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று நேற்று இராத்திரி என்னோடே சொன்னார்.

30. இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள வாஞ்சையினால் நீ புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டு போகிறாய் என்று கேட்டான்.

31. யாக்கோபு லாபானுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய குமாரத்திகளைப் பலாத்காரமாய்ப் பிடித்து வைத்துக்கொள்வீர் என்று நான் அஞ்சினதினாலே இப்படி வந்துவிட்டேன்.

32. ஆனாலும் யாரிடத்தில் உம்முடைய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறீரோ, அவனை உயிரோடே விடவேண்டாம்; உம்முடைய பொருள்கள் ஏதாவது என் வசத்தில் உண்டானால் நீர் அதை நம்முடைய சகோதரருக்கு முன்பாகப் பரிசோதித்தறிந்து, அதை எடுத்துக்கொள்ளும் என்றான். ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டு வந்ததை யாக்கோபு அறியாதிருந்தான்.

33. அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாளின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் பிரவேசித்துப் பார்த்தும் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை; பின்பு, லேயாளின் கூடாரத்தைவிட்டு ராகேலின் கூடாரத்துக்குப் போனான்.

34. ராகேல் அந்தச் சுரூபங்களை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான் கூடாரம் எங்கும் தடவிப்பார்த்தும், அவைகளைக் கண்டுபிடிக்கவில்லை.

35. அவள் தன் தகப்பனை நோக்கி: என் ஆண்டவனாகிய உமக்கு முன்பாக நான் எழுந்திராததைக்குறித்துக் கோபங்கொள்ளவேண்டாம்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு எனக்கு உண்டாயிருக்கிறது என்றாள்; அப்படியே அவன் அந்தச் சுரூபங்களைத் தேடியும் கண்டுபிடிக்கவில்லை.

36. அப்பொழுது யாக்கோபுக்குக் கோபம் எழும்பி, லாபானோடே வாக்குவாதம்பண்ணி: நீர் என்னை இவ்வளவு உக்கிரமாய்த் தொடர்ந்துவரும்படிக்கு நான் செய்த தப்பிதம் என்ன? நான் செய்த துரோகம் என்ன?

37. என் தட்டுமுட்டுகளையெல்லாம் தடவிப்பார்த்தீரே; உம்முடைய வீட்டுத் தட்டுமுட்டுகளில் என்னத்தைக் கண்டுபிடித்தீர்? அதை என்னுடைய சகோதரருக்கும் உம்முடைய சகோதரருக்கும் முன்பாக இங்கே வையும்; அவர்கள் எனக்கும் உமக்கும் நடுத்தீர்க்கட்டும்.

38. இந்த இருபது வருஷகாலமாய் நான் உம்மிடத்தில் இருந்தேன்; உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினையழியவில்லை; உம்முடைய மந்தையின் கடாக்களை நான் தின்னவில்லை.

39. பீறுண்டதை நான் உம்மிடத்துக்குக் கொண்டுவராமல், அதற்காக நான் உத்தரவாதம்பண்ணினேன்; பகலில் களவுபோனதையும், இரவில் களவுபோனதையும் என் கையில் கேட்டு வாங்கினீர்.

40. பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைப் பட்சித்தது; நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இவ்விதமாய்ப் பாடுபட்டேன்.

41. இந்த இருபது வருஷகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன்; பதினாலு வருஷம் உம்முடைய இரண்டு குமாரத்திகளுக்காகவும், ஆறு வருஷம் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் சேவித்தேன்; பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர்.

42. என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று இராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னான்.

43. அப்பொழுது லாபான் யாக்கோபுக்குப் பிரதியுத்தரமாக: இந்தக் குமாரத்திகள் என் குமாரத்திகள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தை என் மந்தை; நீ காண்கிற யாவும் என்னுடையவைகள்; என் குமாரத்திகளாகிய இவர்களையும், இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் இன்று நான் என்ன செய்யக்கூடும்?

44. இப்பொழுதும் எனக்கும் உனக்கும் சாட்சியாயிருக்கும்பொருட்டு, நீயும் நானும் உடன்படிக்கைபண்ணிக்கொள்ளக்கடவோம் என்றான்.

45. அப்பொழுது யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தினான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 31