பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 29:12-22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

12. தான் அவள் தகப்பனுடைய மருமகனென்றும், ரெபெக்காளின் குமாரனென்றும் ராகேலுக்கு அறிவித்தான். அவள் ஓடிப்போய்த் தன் தகப்பனுக்கு அறிவித்தாள்.

13. லாபான் தன் சகோதரியின் குமாரனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைக் கட்டிக்கொண்டு முத்தஞ்செய்து, தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விவரமாய் லாபானுக்குச் சொன்னான்.

14. அப்பொழுது லாபான்: நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றான். ஒரு மாதம்வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான்.

15. பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலைசெய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல் என்றான்.

16. லாபானுக்கு இரண்டு குமாரத்திகள் இருந்தார்கள்; மூத்தவள் பேர் லேயாள், இளையவள் பேர் ராகேல்.

17. லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது; ராகேலோ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள்.

18. யாக்கோபு ராகேல் பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலை செய்கிறேன் என்றான்.

19. அதற்கு லாபான்: நான் அவளை அந்நிய புருஷனுக்குக் கொடுக்கிறதைப்பார்க்கிலும், அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தரித்திரு என்றான்.

20. அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷம் வேலை செய்தான்; அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்ச நாளாகத் தோன்றினது.

21. பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.

22. அப்பொழுது லாபான் அவ்விடத்து மனிதர் எல்லாரையும் கூடிவரச்செய்து விருந்துபண்ணினான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 29