பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 13:21-39 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

21. தாவீது ராஜா இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டபோது, வெகு கோபமாயெரிந்தான்.

22. அப்சலோம் அம்னோனோடே நன்மையாகிலும் தீமையாகிலும் பேசவில்லை; தன் சகோதரியாகிய தாமாரை அம்னோன் கற்பழித்த காரியத்தினிமித்தம் அப்சலோம் அவனைப் பகைத்தான்.

23. இரண்டு வருஷம் சென்றபின்பு, அப்சலோம் எப்பிராயீமுக்குச் சமீபமான பாலாத்சோரிலே ஆட்களை வைத்து, ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிற வேலையில் இருந்தான்; அங்கே ராஜகுமாரர் எல்லாரையும் விருந்துக்கு அழைத்தான்.

24. அவன் ராஜாவினிடத்தில் போய், ஆட்களை வைத்து ஆடுகளை மயிர்கத்தரிக்கிறேன்; ராஜாவும் அவருடைய ஊழியக்காரரும் உமது அடியானோடே வரும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

25. ராஜா அப்சலோமைப் பார்த்து: அப்படி வேண்டாம், என் மகனே; நாங்கள் எல்லாரும் வருவோமாகில் உனக்கு வெகு செலவுண்டாகும் என்றான்; அவனை வருந்திக்கேட்டாலும், அவன் போக மனதில்லாமல், அவனை ஆசீர்வதித்தான்.

26. அப்பொழுது அப்சலோம்: அது கூடாதிருந்தால், என் சகோதரனாகிய அம்னோனாவது எங்களோடே வரும்படி அவனுக்கு உத்தரவு செய்யும் என்றான். அதற்கு ராஜா: அவன் உன்னோடே வரவேண்டியது என்ன என்றான்.

27. அப்சலோம் பின்னையும் அவனை வருந்திக் கேட்டுக்கொண்டபடியினால், அவன் அம்னோனையும், ராஜாவின் குமாரர் அனைவரையும் அவனோடே போகவிட்டான்.

28. அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப் பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன்; உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாயிருங்கள் என்று சொல்லியிருந்தான்.

29. அப்சலோம் கற்பித்தபடியே அப்சலோமின் வேலைக்காரர் அம்னோனுக்குச் செய்தார்கள்; அப்பொழுது ராஜகுமாரர் எல்லாரும் எழுந்திருந்து, அவரவர் தம் தம் கோவேறு கழுதையின்மேல் ஏறி ஓடிப்போனார்கள்.

30. அவர்கள் வழியில் இருக்கிறபோதே, அப்சலோம் ராஜகுமாரரையெல்லாம் அடித்துக் கொன்றுபோட்டான், அவர்களில் ஒருவரும் மீந்திருக்க விடவில்லை என்கிறதாய், தாவீதுக்குச் செய்தி வந்தது.

31. அப்பொழுது ராஜா எழுந்திருந்து, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தரையிலே விழுந்து கிடந்தான்; அவன் ஊழியக்காரர் எல்லாரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு நின்றார்கள்.

32. அப்பொழுது தாவீதின் தமையனாகிய சிமியாவின் குமாரன் யோனதாப் வந்து: ராஜகுமாரரான வாலிபரையெல்லாம் கொன்று போட்டார்கள் என்று என் ஆண்டவன் நினைக்கவேண்டாம்; அம்னோன் மாத்திரம் செத்துப்போனான்; அவன் தன் சகோதரியாகிய தாமாரைக் கற்பழித்த நாள்முதற்கொண்டு, அது அப்சலோமின் நெஞ்சில் இருந்தது.

33. இப்போதும் ராஜகுமாரர்கள் எல்லாரும் செத்தார்கள் என்கிற பேச்சை ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய மனதிலே வைக்கவேண்டாம்; அம்னோன் ஒருவனே செத்தான் என்றான்; அப்சலோம் ஓடிப்போனான்.

34. ஜாமக்காரச் சேவகன் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, அநேகம் ஜனங்கள் தனக்குப் பின்னாலே மலை ஓரமாய் வருகிறதைக் கண்டான்.

35. அப்பொழுது யோனதாப் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜகுமாரர் வருகிறார்கள்; உமது அடியேன் சொன்னபடியே ஆயிற்று என்றான்.

36. அவன் பேசி முடிந்தபோது, ராஜகுமாரர் வந்து, சத்தமிட்டு அழுதார்கள்; ராஜாவும் அவனுடைய எல்லா ஊழியக்காரரும் மிகவும் புலம்பி அழுதார்கள்.

37. அப்சலோமோ அம்மீயூதின் குமாரனாகிய தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவினிடத்திற்கு ஓடிப்போனான். தாவீது தினந்தோறும் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.

38. அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போய், அங்கே மூன்று வருஷம் இருந்தான்.

39. தாவீது ராஜா அம்னோன் செத்தபடியினால், அவனுக்காகத் துக்கித்து ஆறுதல் அடைந்தபோது அப்சலோமைப் பின்தொடரும் நினைவை விட்டுவிட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 13