பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 23:5-21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

5. யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமைச் சுற்றிலும் மேடைகளின்மேல் தூபங்காட்ட, யூதாவின் ராஜாக்கள் வைத்த பூஜாசாரிகளையும், பாகாலுக்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகங்களுக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் தூபங்காட்டினவர்களையும் அகற்றிவிட்டான்.

6. தோப்பு விக்கிரகத்தை கர்த்தரின் ஆலயத்திலிருந்து எருசலேமுக்குப் புறம்பே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோய், அதைக் கீதரோன் ஆற்று ஓரத்திலே சுட்டெரித்து, அதைத் தூளாக்கி, அந்தத் தூளை ஜனபுத்திரருடைய பிரேதக் குழிகளின்மேல் போடுவித்தான்.

7. கர்த்தரின் ஆலயத்திற்கு அருகே ஸ்திரீகள் தோப்பு விக்கிரகத்துக்குக் கூடாரங்களை நெய்த இடத்திலுள்ள இலச்சையான புணர்ச்சிக்காரரின் வீடுகளை இடித்துப்போட்டான்.

8. அவன் யூதாவின் பட்டணங்களிலுள்ள எல்லா ஆசாரியரையும் வரச்சொல்லி, கேபாமுதல் பெயெர்செபாமட்டும் ஆசாரியர்கள் தூபங்காட்டியிருந்த மேடைகளைத் தீட்டாக்கி, ஒலிமுகவாசல்களின் மேடைகளையும், பட்டணத்து வாசலுக்குப்போகும் வழிக்கு இடதுபுறமாயிருக்கிற பட்டணத்தலைவனாகிய யோசுவாவின் வாசற்படியில் இருந்த மேடையையும் இடித்துப்போட்டான்.

9. மேடைகளின் ஆசாரியர்கள் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடாமல், தங்கள் சகோதரருக்குள்ளே புளிப்பில்லாத அப்பங்களைப் புசிக்கிறதற்குமாத்திரம் உத்தாரம்பெற்றார்கள்.

10. ஒருவனும் மோளேகுக்கென்று தன் குமாரனையாகிலும் தன் குமாரத்தியையாகிலும் தீக்கடக்கப்பண்ணாதபடிக்கு, இன்னோம் புத்திரரின் பள்ளத்தாக்கிலிருக்கிற தோப்பேத் என்னும் ஸ்தலத்தையும் அவன் தீட்டாக்கி,

11. கர்த்தரின் ஆலயத்திற்குள் போகிற இடந்தொடங்கி, பட்டணத்துக்குப் புறம்பே இருக்கிற நாத்தான்மெலெக் என்னும் பிரதானியின் அறைவீடுமட்டும் யூதாவின் ராஜாக்கள் சூரியனுக்கென்று வைத்திருந்த குதிரைகளை அகற்றி, சூரியனின் இரதங்களை அக்கினியில் சுட்டெரித்தான்.

12. யூதாவின் ராஜாக்கள் உண்டாக்கினதும், ஆகாசுடைய மேல்வீட்டில் இருந்ததுமான பலிபீடங்களையும், மனாசே கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் உண்டாக்கின பலிபீடங்களையும் ராஜா இடித்து, அவைகளின் தூளை அங்கேயிருந்து எடுத்துக் கீதரோன் ஆற்றில் கொட்டினான்.

13. எருசலேமுக்கு எதிரே இருக்கிற நாசமலையின் வலதுபுறத்தில் இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் சீதோனியரின் அருவருப்பாகிய அஸ்தரோத்திற்கும், மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மில்கோமுக்கும் கட்டியிருந்த மேடைகளையும் ராஜா தீட்டாக்கி,

14. சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை நிர்மூலமாக்கி, அவைகளின் ஸ்தலத்தை மனுஷரின் எலும்புகளால் நிரப்பினான்.

15. இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் பெத்தேலில் உண்டாக்கியிருந்த பலிபீடமும் மேடையும் ஆகிய அவ்விரண்டையும் அவன் இடித்து, அந்த மேடையைச் சுட்டெரித்துத் தூளாக்கி, விக்கிரகத்தோப்பையும் சுட்டெரித்தான்.

16. யோசியா திரும்பிப்பார்க்கிறபோது அங்கே அந்த மலையிலிருக்கிற கல்லறைகளைக் கண்டு, ஆட்களை அனுப்பி, அந்தக் கல்லறைகளிலுள்ள எலும்புகளை எடுத்து வரச்செய்து, இப்படி நடக்கும் என்று தேவனுடைய மனுஷன் கூறின கர்த்தருடைய வார்த்தையின்படியே, அவைகளை அந்தப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து அதைத் தீட்டாக்கினான்.

17. அப்பொழுது அவன்: நான் காண்கிற அந்தக் குறிப்படையாளம் என்ன என்று கேட்டதற்கு, அந்தப் பட்டணத்து மனுஷர்: அது யூதாவிலிருந்து வந்து, நீர் செய்த இந்தக் கிரியைகளைப் பெத்தேலின் பலிபீடத்திற்கு விரோதமாய்க் கூறி, அறிவித்த தேவனுடைய மனுஷனின் கல்லறை என்றார்கள்.

18. அதற்கு அவன்: இருக்கட்டும், ஒருவனும் அவன் எலும்புகளைத் தொடவேண்டாம் என்றான்; அப்படியே அவன் எலும்புகளைச் சமாரியாவிலிருந்து வந்த தீர்க்கதரிசியின் எலும்புகளோடு விட்டுவிட்டார்கள்.

19. கர்த்தருக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேலின் ராஜாக்கள் சமாரியாவின் பட்டணங்களில் உண்டாக்கியிருந்த மேடைகளின் கோவில்களையெல்லாம் யோசியா தகர்த்து, பெத்தேலிலே தான் செய்த செய்கைகளின்படியே அவைகளுக்குச் செய்து,

20. அவ்விடங்களில் இருக்கிற மேடைகளின் ஆசாரியர்களையெல்லாம் பலிபீடங்களின்மேல் கொன்றுபோட்டு, அவைகளின்மேல் மனுஷரின் எலும்புகளைச் சுட்டெரித்து, எருசலேமுக்குத் திரும்பினான்.

21. பின்பு ராஜா: இந்த உடன்படிக்கையின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரியுங்கள் என்று சகல ஜனங்களுக்கும் கட்டளையிட்டான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 23