பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 19:17-31 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

17. கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும் அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,

18. அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள்.

19. இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.

20. அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபின்நிமித்தம் நீ என்னை நோக்கிப் பண்ணின விண்ணப்பத்தைக் கேட்டேன்.

21. அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.

22. யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாயல்லவோ உன் கண்களை மேட்டிமையாக ஏறெடுத்தாய்?

23. உன் ஸ்தானாபதிகளைக்கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரி விருட்சங்களையும் நான் வெட்டி, அதின் கடையாந்தரத் தாபரமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும்,

24. நான் அந்நிய தேசங்களில் கிணறுவெட்டி தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்கால்களினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும்பண்ணினேன் என்றும் சொன்னாய்.

25. நான் வெகுகாலத்திற்குமுன் அதை நியமித்து, பூர்வநாட்கள் முதல் அதைத் திட்டம்பண்ணினேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ அரணான பட்டணங்களைப் பாழான மண்மேடுகள் ஆக்கும்படிக்கு நானே அதைச் சம்பவிக்கப்பண்ணினேன்.

26. அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஒங்கிவளருமுன் தீய்ந்துபோகும் பயிருக்கும் சமானமானார்கள்.

27. உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.

28. நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளித்து, வீரியம் பேசினது என் செவிகளில் ஏறினபடியினால், நான் என் துறட்டை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்தவழியே உன்னைத் திருப்பிக்கொண்டுபோவேன் என்று அவனைக்குறித்துச் சொல்லுகிறார்.

29. உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள்.

30. யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்.

31. மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலும் இருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 19