பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 17:20-32 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

20. ஆகையால் கர்த்தர் இஸ்ரவேல் சந்ததியாரையெல்லாம் புறக்கணித்து, அவர்களைத் தமது முகத்தைவிட்டுத் தள்ளுமட்டாக ஒடுக்கி, அவர்களைக் கொள்ளைக்காரர் கையில் ஒப்புக்கொடுத்தார்.

21. இஸ்ரவேலர் தாவீது வம்சத்தைவிட்டுப் பிரிந்து, நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமை ராஜாவாக்கினார்கள்; அப்பொழுது யெரொபெயாம் இஸ்ரவேலைக் கர்த்தரை விட்டுப் பின்வாங்கவும், பெரிய பாவத்தைச் செய்யவும்பண்ணினான்.

22. அப்படியே இஸ்ரவேல் புத்திரர் யெரொபெயாம் செய்த எல்லாப் பாவங்களிலும் நடந்து,

23. கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர் எல்லாரையும் கொண்டு சொல்லியிருந்தபடி. அவர்களைத் தமது சமுகத்தைவிட்டு அகற்றுகிறவரைக்கும், அவைகளை விட்டு விலகாதிருந்தார்கள்; இப்படியே இஸ்ரவேலர் தங்கள் தேசத்தினின்று அசீரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டு இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள்.

24. அசீரியா ராஜா, பாபிலோனிலும், கூத்தாவிலும், ஆபாவிலும், ஆமாத்திலும், செப்பவார்யிமிலும் இருந்து மனுஷரை வரப்பண்ணி, அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்குப் பதிலாகச் சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றினான்; இவர்கள் சமாரியாவைச் சொந்தமாய்க் கட்டிக்கொண்டு அதின் பட்டணங்களிலே குடியிருந்தார்கள்.

25. அவர்கள் அங்கே குடியேறினது முதல், கர்த்தருக்குப் பயப்படாததினால், கர்த்தர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அவைகள் அவர்களில் சிலரைக் கொன்றுபோட்டது.

26. அப்பொழுது ஜனங்கள் அசீரியா ராஜாவை நோக்கி: நீர் இங்கேயிருந்து அனுப்பி, சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றுவித்த ஜாதிகள் அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அறியாதபடியினால், அவர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அந்த தேசத்து தேவனுடைய காரியத்தை அவர்கள் அறியாதபடியினால், அவைகள் அவர்களைக் கொன்றுபோடுகிறது என்று சொன்னார்கள்.

27. அதற்கு அசீரியா ராஜா: நீங்கள் அங்கேயிருந்து கொண்டுவந்த ஆசாரியர்களில் ஒருவனை அங்கே அழைத்துக்கொண்டுபோங்கள்; அவர்கள் அங்கே குடியிருக்கும்படிக்கு, அவன் அவர்களுக்கு அந்த தேசத்து தேவனுடைய காரியத்தைப் போதிக்கக்கடவன் என்று கட்டளையிட்டான்.

28. அப்படியே அவர்கள் சமாரியாவிலிருந்து கொண்டுபோயிருந்த ஆசாரியர்களில் ஒருவன் வந்து, பெத்தேலிலே குடியிருந்து, கர்த்தருக்குப் பயந்து நடக்கவேண்டிய விதத்தை அவர்களுக்குப் போதித்தான்.

29. ஆனாலும் அந்தந்த ஜாதி தங்கள் தங்கள் தேவர்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி, அந்தந்த ஜாதியார் குடியேறின தங்கள் தங்கள் பட்டணங்களில் சமாரியர் உண்டுபண்ணின மேடைகளின் கோவில்களில் வைத்தார்கள்.

30. பாபிலோனின் மனுஷர் சுக்கோத் பெனோத்தையும், கூத்தின் மனுஷர் நேர்காலையும், ஆமாத்தின் மனுஷர் அசிமாவையும்,

31. ஆவியர் நிபேகாசையும் தர்தாக்கையும் உண்டாக்கினார்கள், செப்பர்வியர் செப்பர்வாயிமின் தேவர்களாகிய அத்ரமலேக்குக்கும் அன்னமலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை அக்கினியில் தகனித்து வந்தார்கள்.

32. அவர்கள் கர்த்தருக்குப் பயந்ததுமன்றி, மேடைகளிலுள்ள கோவில்களில் தங்களுக்காக ஆராதனை செய்கிறதற்கு, தங்களுக்குள் ஈனமானவர்களை ஆசாரியர்களாகவும் ஏற்படுத்தினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 17