பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 14:4-21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

4. மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தார்கள்.

5. ராஜ்யபாரம் அவன் கையிலே ஸ்திரப்பட்டபோது, அவனுடைய தகப்பனாகிய ராஜாவைக் கொன்றுபோட்ட தன் ஊழியக்காரரைக் கொன்றுபோட்டான்.

6. ஆனாலும் பிள்ளைகளினிமித்தம் பிதாக்கள் கொலைசெய்யப்படாமலும் பிதாக்களினிமித்தம் பிள்ளைகள் கொலைசெய்யப்படாமலும், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலை செய்யப்படவேண்டும் என்று மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி, கர்த்தர் கட்டளையிட்ட பிரகாரம் கொலைசெய்தவர்களின் பிள்ளைகளை அவன் கொல்லாதிருந்தான்.

7. அவன் உப்புப்பள்ளத்தாக்கிலே ஏதோமியரில் பதினாயிரம்பேரை மடங்கடித்து, யுத்தஞ்செய்து சேலாவைப் பிடித்து, அதற்கு இந்நாள் வரைக்கும் இருக்கிற யொக்தியேல் என்னும் பேரைத் தரித்தான்.

8. அப்பொழுது அமத்சியா யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம் வா என்று சொல்லச் சொன்னான்.

9. அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது, லீபனோனிலுள்ள கேதுரு மரத்தை நோக்கி, நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக விவாகஞ் செய்துகொடு என்று சொல்லச்சொல்லிற்று; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழி போகையில் ஓடி அந்த முட்செடியை மிதித்துப் போட்டது.

10. நீ ஏதோமியரை முறிய அடித்ததினால் உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது; நீ பெருமை பாராட்டிக்கொண்டு உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடேகூட யூதாவும் விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச்சொன்னான்.

11. ஆனாலும் அமத்சியா செவிகொடாதேபோனான்; ஆகையால், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலுள்ள பெத்ஷிமேசிலே அவனும், யூதாவின் ராஜா அமத்சியாவும், தங்கள் சாமர்த்தியத்தைப் பார்க்கிறபோது,

12. யூதா ஜனங்கள் இஸ்ரவேலருக்கு முன்பாக முறிந்து அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.

13. அகசியாவின் குமாரனாகிய யோவாசின் குமாரன் அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவையோ, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் பெத்ஷிமேசிலே பிடித்து, எருசலேமுக்கு வந்து, எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல் தொடங்கி மூலைவாசல்மட்டும் நானூறு முழ நீளம் இடித்துப்போட்டு,

14. கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களிலும் அகப்பட்ட பொன் வெள்ளி யாவையும், சகல பணிமுட்டுகளையும், கிரியிருப்பவர்களையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான்.

15. யோவாஸ் செய்த மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய வல்லமையும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு யுத்தம்பண்ணின விதமும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

16. யோவாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யெரொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

17. இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் மரணமடைந்தபின், யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா பதினைந்துவருஷம் உயிரோடிருந்தான்.

18. அமத்சியாவின் மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

19. எருசலேமிலே அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணினார்கள்; அப்பொழுது லாகீசுக்கு ஓடிப்போனான்; ஆனாலும் அவர்கள் அவன் பிறகே லாகீசுக்கு மனுஷரை அனுப்பி, அங்கே அவனைக் கொன்றுபோட்டு,

20. குதிரைகள்மேல் அவனை எடுத்துக்கொண்டு வந்தார்கள்; அவன் எருசலேமில் இருக்கிற தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

21. யூதா ஜனங்கள் யாவரும் பதினாறு வயதுள்ள அசரியாவை அழைத்து வந்து அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 14