பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 23:20-29 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

20. இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கி வாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் என்றார்கள்,

21. அதற்கு சவுல்: நீங்கள் என்மேல் தயை வைத்ததினாலே, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்களாக.

22. நீங்கள் போய், அவன் கால் நடமாடுகிற இடத்தைப் பார்த்து, அங்கே அவனைக் கண்டவன் யார் என்பதையும் இன்னும் நன்றாய் விசாரித்து அறியுங்கள்; அவன் மகா தந்திரவாதி என்று எனக்குத் தெரிய வந்தது.

23. அவன் ஒளித்துக்கொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் பார்த்தறிந்து கொண்டு, நிச்சய செய்தி எனக்குக் கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் உங்களோடே கூடவந்து, அவன் தேசத்தில் இருந்தால், யூதாவிலிருக்கிற சகல ஆயிரங்களுக்குள்ளும் அவனைத் தேடிப் போவேன் என்றான்.

24. அப்பொழுது அவர்கள் எழுந்து, சவுலுக்கு முன்னாலே சீப் ஊருக்குப் போனார்கள்; தாவீதும் அவன் மனுஷரும் எஷிமோனுக்குத் தெற்கான அந்தர வெளியாகிய மாகோன் வனாந்தரத்தில் இருந்தார்கள்.

25. சவுலும் அவன் மனுஷரும் தாவீதைத் தேடவருகிறார்கள் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் கன்மலையிலிருந்து இறங்கி, மாகோன் வனாந்தரத்திலே தங்கினான்; அதைச் சவுல் கேள்விப்பட்டு, மாகோன் வனாந்தரத்திலே தாவீதைப் பின்தொடர்ந்தான்.

26. சவுல் மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும், அவன் மனுஷரும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள்; சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது தீவிரித்தபோது, சவுலும் அவன் மனுஷரும் தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கத்தக்கதாய் அவர்களை வளைந்து கொண்டார்கள்,

27. அந்தச் சமயத்தில் ஒரு ஆள் சவுலிடத்தில் வந்து: நீர் சீக்கிரமாய் வாரும்; பெலிஸ்தர் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான்.

28. அதனால் சவுல் தாவீதைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பி, பெலிஸ்தரை எதிர்க்கும்படி போனான்; ஆதலால் அவ்விடத்திற்குச் சேலா அம்மாலிகோத் என்று பேரிட்டார்கள்.

29. தாவீது அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டு, என்கேதியிலுள்ள அரணிப்பான இடங்களில் தங்கினான்,

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 23