பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 14:31-48 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

31. அவர்கள் அன்றையதினம் மிக்மாசிலிருந்து ஆயலோன்மட்டும் பெலிஸ்தரை முறிய அடித்தபோது, ஜனங்கள் மிகவும் விடாய்த்திருந்தார்கள்.

32. அப்பொழுது ஜனங்கள் கொள்ளையின்மேல் பாய்ந்து, ஆடுகளையும், மாடுகளையும், கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையிலே போட்டு அடித்து, இரத்தத்தோடும் புசித்தார்கள்.

33. அப்பொழுது, இதோ, இரத்தத்தோடிருக்கிறதைப் புசிக்கிறதினால் ஜனங்கள் கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்கிறார்கள் என்று சவுலுக்கு அறிவித்தார்கள்; அவன்: நீங்கள் துரோகம்பண்ணினீர்கள்; இப்போதே ஒரு பெரிய கல்லை என்னிடத்தில் உருட்டிக்கொண்டுவாருங்கள்.

34. நீங்கள் ஜனத்திற்குள்ளே போய், இரத்தத்தோடிருக்கிறதைச் சாப்பிடுகிறதினாலே, கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்யாதபடிக்கு, அவரவர் தங்கள் மாட்டையும் அவரவர் தங்கள் ஆட்டையும் என்னிடத்தில் கொண்டுவந்து, இங்கே அடித்து, பின்பு சாப்பிடவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; ஆகையால் ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் மாடுகளை அன்று இராத்திரி தாங்களே கொண்டுவந்து, அங்கே அடித்தார்கள்.

35. பின்பு சவுல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்; அது அவன் கர்த்தருக்குக் கட்டின முதலாவது பலிபீடம்.

36. அதற்குப்பின்பு சவுல்: நாம் இந்த இராத்திரியிலே பெலிஸ்தரைத் தொடர்ந்துபோய், விடியற்கால வெளிச்சமாகுமட்டும் அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களில் ஒருவரையும் மீதியாக வைக்காதிருப்போமாக என்றான். அதற்கு அவர்கள்: உம்முடைய கண்களுக்கு நலமானபடியெல்லாம் செய்யும் என்றார்கள். ஆசாரியனோ: நாம் இங்கே தேவசந்நிதியில் சேரக்கடவோம் என்றான்.

37. அப்படியே: பெலிஸ்தரைத் தொடர்ந்து போகலாமா? அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுப்பீரா? என்று சவுல் தேவனிடத்தில் விசாரித்தான்; அவர் அந்த நாளிலே அவனுக்கு மறுஉத்தரவு அருளவில்லை.

38. அப்பொழுது சவுல்: ஜனத்தின் தலைவர்களே, நீங்கள் எல்லாரும் இங்கே சேர்ந்து வந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்தறியுங்கள்.

39. அது என் குமாரனாகிய யோனத்தானிடத்தில் காணப்பட்டாலும், அவன் சாகவே சாகவேண்டும் என்று இஸ்ரவேலை இரட்சிக்கிற கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; சகல ஜனங்களுக்குள்ளும் ஒருவனும் அவனுக்குப் பிரதியுத்தரம் சொல்லவில்லை.

40. அதற்குப்பின் அவன் இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: நீங்கள் அந்தப்பக்கத்திலே இருங்கள்; நானும் என் குமாரனாகிய யோனத்தானும் இந்தப்பக்கத்தில் இருப்போம் என்றான்; ஜனங்கள் சவுலைப்பார்த்து: உம்முடைய கண்களுக்கு நலமானபடி செய்யும் என்றார்கள்.

41. அப்பொழுது சவுல் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நோக்கி: நிதானமாய்க் கட்டளையிட்டு யதார்த்தத்தை விளங்கப்பண்ணும் என்றான்; அப்பொழுது யோனத்தான்மேலும் சவுலின்மேலும் சீட்டு விழுந்தது, ஜனங்களோ தப்பினார்கள்.

42. எனக்கும் என் குமாரனாகிய யோனத்தானுக்கும் சீட்டுப்போடுங்கள் என்று சவுல் சொன்னபோது, யோனத்தான்மேல் சீட்டு விழுந்தது.

43. அப்பொழுது சவுல் யோனத்தானைப் பார்த்து: நீ செய்தது என்ன? எனக்குச் சொல் என்று கேட்டான். அதற்கு யோனத்தான்: என் கையில் இருக்கிற கோலின் நுனியினாலே கொஞ்சம் தேன் எடுத்து ருசிபார்த்தேன்; அதற்காக நான் சாகவேண்டும் என்றான்.

44. அப்பொழுது சவுல்: யோனத்தானே, நீ சாகத்தான் வேண்டும்; இல்லாவிட்டால் தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்றான்.

45. ஜனங்களோ சவுலை நோக்கி: இஸ்ரவேலிலே இந்தப் பெரிய இரட்சிப்பைச் செய்த யோனத்தான் கொலை செய்யப்படலாமா? அது கூடாது; அவன் தலையில் இருக்கிற ஒரு மயிரும் தரையிலே விழப்போகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறோம்; தேவன் துணை நிற்க அவன் இன்று காரியத்தை நடப்பித்தான் என்றார்கள்; அப்படியே யோனத்தான் சாகாதபடிக்கு, ஜனங்கள் அவனைத் தப்புவித்தார்கள்.

46. சவுல் பெலிஸ்தரைத் தொடராமல் திரும்பிவிட்டான்; பெலிஸ்தரும் தங்கள் ஸ்தலத்திற்குப் போய்விட்டார்கள்.

47. இப்படிச் சவுல் இஸ்ரவேலை ஆளுகிற ராஜ்யபாரத்தைப் பெற்றுக்கொண்டு, சுற்றிலும் இருக்கிற தன்னுடைய எல்லாச் சத்துருக்களாகிய மோவாபியருக்கும், அம்மோன் புத்திரருக்கும், ஏதோமியருக்கும், சோபாவின் ராஜாக்களுக்கும், பெலிஸ்தருக்கும் விரோதமாக யுத்தம்பண்ணி, எவர்கள்மேல் படையெடுத்தானோ, அவர்களையெல்லாம் அடக்கினான்.

48. அவன் பலத்து, அமலேக்கியரை முறிய அடித்து, இஸ்ரவேலரைக் கொள்ளையிடுகிற யாவர் கைக்கும் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தான்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 14